இடி அமீன். கேட்டாலே அதிர வைக்கும் பெயர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை 9 ஆண்டுகள் ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி. ‘கிங்ஸ் ஆப்பி ரிக்கன் ரைபிள்ஸ்’ படையில் சமையல் உதவியாளராகச் சேர்ந்த இடி அமீன், படிப்படியாக உயர்ந்து மேஜர் ஜெனரலானார். உகாண்டாவின் அப்போதைய பிரதமர் மில்ட்டன் ஒபோட்டேயுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவானது.
தன்னைக் கைதுசெய்ய ஒபோட்டே திட்டமிடுவதாகச் சந்தேகித்த இடி அமீன், அவர் சிங்கப்பூருக்குப் பயணம் சென்றிருந்தபோது, அதாவது 1971 ஜனவரி 25-ல் ராணுவப் புரட்சியின் மூலம் அவரது ஆட்சியைக் கவிழ்த்தார். பிப்ரவரி 2-ல் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டார். 1979-ல் தான்சானியா படைகள் உகாண்டா வைக் கைப்பற்றியபோது லிபியாவுக்குத் தப்பிச் சென்றார். சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்த இடி அமீன், 2003-ல் தனது 78-வது வயதில் மரணமடைந்தார்.