உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்று நயாகரா அருவி. அழகில் மட்டுமல்ல, நீர் வழி மின்உற்பத்தியிலும் ஆச்சரியமூட்டுகிறது.
மின்உற்பத்தியில் அனல், அணு உள்ளிட்டவற்றைவிடவும் காற்று, சூரியக் கதிர், நீர் ஆகியவை சூழலியல் நண்பனாகக் கருதப்படுகின்றன. 1956-ல் பாறைச் சரிவினால் நயாகராவின் நதிப் பகுதியில் செயல்பட்டுவந்த மின்நிலையம் முடங்கிப்போனது. 10 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயச் சூழல் எழவே, அமெரிக்க அரசு நயாகரா மறுசீரமைப்பு வளர்ச்சிச் சட்டம் கொண்டுவந்தது.
அதன்படி 12,000 தொழிலாளர்கள் இரவும் பகலும் இடைவிடாது உழைத்துப் பிரம்மாண்டமான நயாகரா புனல்மின் நிலையத்தைக் கட்டி எழுப்பினர். நியூயார்க் ஆளுநர் ராக் ஃபெல்லர் 1961 பிப்ரவரி 10-ல் தொடங்கிவைக்க, 1,900 ஏக்கர் நீர்த்தேக்கத்திலிருந்து 2,400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நீர் வழி மின்உற்பத்தி நிலையமாகவும் பெருமை சேர்த்துவருகிறது.