சிவா இரவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான். வரப்போகும் காதலர் தினத்துக்கு பூரணிக்கு என்ன பரிசு தருவது என்று. சிவா, பூரணி இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள். நட்பாக பழக ஆரம்பித்து, சில மாதங்கள் முன் தான் இருவரும் பரஸ்பரம் தங்கள் காதலை சொல்லிக் கொண்டனர்.
“டேய் .. மச்சான். அவளுக்கு ஒரு தங்க மோதிரம் வாங்கி கொடுடா.. ”
“அதெல்லாம் பழைய ஸ்டைல். ஃபேன்சியா ஒரு மொபைல் போன் வாங்கிக்கொடுடா” என்று நண்பர்கள் அவனுக்கு யோசனை கூறினார்கள்.
நீண்ட யோசனைக்குப் பிறகு பூரணிக்கு ஒரு கைக் கடிகாரம் வாங்க முடிவு செய்தான் சிவா.
“அம்மா.. எனக்கு அவசரமா ஒரு இரண்டாயிரம் ரூபா வேணும்மா” என்றான்.
“இப்போ எதுக்குடா பணம்?” என்றாள் பிரேமா.
“ஒண்ணுமில்லைம்மா.. லேப் ஃபீஸ் கட்டணும் . இல்லாட்டி உள்ளே விடமாட்டங்க” என்றான்.
“அய்யோ.. அப்படினா முதல்ல பணத்த கட்டு” என்று பணத்தை நீட்டினாள்.
சிவாவுக்கு இரண்டு வயதாகும் போதே அவன் தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட, அவன் தாய் பிரேமாவுக்கு, அவர் வேலை பார்த்த தனியார் நிறுவனத்திலேயே குமாஸ்தா வேலை கிடைத்தது. பிரேமாவும் தன் ஒரே மகனை மனம் கோணாதவாறு வளர்த்து வந்தாள் .
அன்று காதலர் தினம். கடற் கரையில் சிவாவும், பூரணியும் அமர்ந்திருந்தனர்.
“பூரணி.. காதலர் தினத்துக்காக என்னோட அன்பு பரிசு” என்று பரிசுப் பொட்டலத்தை பூரணியிடம் நீட்டினான்.
பார்சலை பிரித்து பார்த்த பூரணி எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தாள்.
“ஏன் பூரணி. இது பிடிக்கலைனா சொல்லு.. வேற மாத்திடலாம்” என் றான்.
“சிவா.. கேட்கறேன்னு தப்பா நினைக்காதே.. இது வாங்க ஏது பணம்?” என்றாள் .
“அது.. வந்து.. ஃபீஸ் கட்டறதுக் குன்னு அம்மா கிட்ட கேட்டேன்”
“சிவா.. இப்ப நம்ம ரெண்டு பேருக்குமே வேலை இல்லை. படிப்பு செலவுக்கே பெத்தவங்கள நம்பி இருக்கோம். இந்த நெலமையில காதலுக்கு நாம மனசையும், அன்பையும் மட்டும்தான் பகிர்ந்துக்கணும். நானும் உன்கிட்ட ஜிகினா பேப்பர் சுத்துன பரிசை எதிர் பாக்குற சராசரி பொண்ணு இல்லை. நாம படிச்சு வேலைக்கு போய், பெத்தவங்களுக்கு வாங்கி கொடுத்துட்டு , அப்புறம் நமக்கு பரிசு கொடுத்துப்போம். முதல்ல இதை போய் உங்க அம்மாவுக்கே கொடு. சரியா..?” என்ற பூரணி சிவாவுக்கு இன்னொரு தாயாக தெரிந்தாள்.