வலைஞர் பக்கம்

ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் 16

செய்திப்பிரிவு

குறள்:

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல் (441)

பொருள்:

முதிர்ந்த அறிவும், தர்ம சிந்தனையும், நியாயம் தெரிந்த மனமும் உடையவர்களை நட்பாக்கி கொள்வது நன்மை தரும். நம்மைவிட அனுபவத்தில் உயர்ந்தவர்களையும், அறிஞர்களையும், நீதி காப்பாளர்களையும், ஞானிகளையும் தேடிச் சென்று நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:

வாழ்க்கை அனுபவத்தில் ஆழம் கண்ட என் தாய் - தந்தையை, நான் சந்தித்த அறிவியல் அறிஞர்களை, மகான்களை, சமூக சேவகர்களை எனது வாழ்வின் வழிகாட்டியாகவே எப்போதும் கருதுகிறேன். அவர்கள்தான் எனது இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு பெற்று என்னை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள்.

திருச்சிராப்பள்ளி தூய ஜோசப் கல்லூரியில், 1950-களில் நான் இளம் அறிவியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கே கணிதப் பேராசிரியராக டி. தோத்தாத்திரி அய்யங்கார் அவர்கள் பணியாற்றினார். தனித்தன்மையும், தெய்வீகப் பொலிவுடன் சுடர்விடும் ஆளுமையும் கொண்ட அந்தப் பேராசிரியரை அடிக்கடி தேடித் தேடிச் சென்று பாட சம்பந்தமான என் ஐயங்களை எல்லாம் கேள்விகளாகக் கேட்டு தெளிவு பெறுவேன். அவரும் சலிப்படையாமல் எனது ஐயங்களுக்கெல்லாம் பொறுமையாக விடை அளிப்பார். அந்த நன்றியுணர்வு மேலிட, இரண்டாயிரமாவது ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்று என்னை பெருமைப்படுத்திக்கொண்டேன்.

இதைத் தொடர்ந்து எனது மூன்று அரும்பெரும் ஆசான்களான டாக்டர் விக்ரம் சாராபாய், பேராசிரியர் சதீஷ் தவான் மற்றும் டாக்டர் பிரம்ம பிரகாஷ் ஆகியோரிடம் நான் கொண்டிருந்த நட்பால், அவர்களிடம் இருந்து தலைமைப் பண்புகளைக் கற்றுக் கொள்கிற வாய்ப்புகளைப் பெற்றேன்!

குறள்:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (448)

பொருள்:

உங்களது செயலில் ஏதேனும் குற்றம், குறை தென்பட்டால் அவற்றைக் கண்டித்து உங்களை நல்வழிப்படுத்தும் பெரியவர்களுடைய உறவை துணையாக கொள்ள வேண்டும். அப்படி கடிந்துரைத்து நல்வழிப்படுத்த ஆளில்லாத தலைவன், அவனைக் கெடுக்கக் கூடிய பகைவர் இல்லாவிட்டாலும்கூட தானே கெட்டுப் போவான்.

விளக்கம்:

எனது தந்தை இராமேசுவரம் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நேரம் அது. ஒருநாள் மாலை நேரம் என் தந்தை பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் சென்றிருந்தார். எங்கள் வீட்டு வாசலில் யாரோ வந்து நிற்பது போலத் தெரிந்தது. அங்கே ஒருவர் தாம்பூலத் தட்டுடன் நின்று கொண்டு, என் அப்பாவை பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார். என் தந்தை பள்ளிவாசலுக்குச் சென்றிருப்பதை அவரிடம் தெரிவித்தேன். அவர் கொண்டு வந்திருந்த தாம்பூலத் தட்டை என்னிடம் கொடுத்து, உனது தந்தை வந்ததும் கொடுத்துவிடு என்று கூறி சென்றுவிட்டார்.

பள்ளிவாசலில் இருந்து திரும்பிய என் தந்தை, அந்தப் பொருட்களைப் பார்த்து யார் கொடுத்தார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் நடந்ததைச் சொன்னேன். எனது தந்தைக்கு கோபம் வந்து என்னை அடி அடியென்று அடித்துவிட்டார். நான் பயத்தில் என் அம்மாவிடம் போய் ஒட்டிக்கொண்டேன். பிறகு என் தந்தை எனக்கு சில அறிவுறை கூறினார். ‘பரிசுப் பொருளாக யார் எதை கொடுத்தாலும் வாங்கக் கூடாது. அது பாவம். எதையோ எதிர்பார்த்து வருவதுதான் பரிசு. இறைவன் ஒருத்தரை ஒரு பதவிக்கு நியமித்தால், அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துவிடுவார். அதற்கு மேலாக அந்த மனிதன் வேறு எதையாவது பெற நினைத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயமாகும்’ என்று திருக்குரானில் இருந்து சில வரிகளை எனக்கு எடுத்துக்காட்டினார். என் தவறை கண்டித்து என்னை நல்வழிபடுத்திய என் தந்தையின் அறிவுரையை நான் என்றைக்கும் மறந்ததே கிடையாது!

- நல்வழி நீளும்…

SCROLL FOR NEXT