நோபல் பெற்ற பிரான்ஸ் உயிரியல் அறிஞர்
மூலக்கூறு உயிரியலின் சிற்பி என்று அழைக்கப்படுபவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1910) பிறந்தார். ஓவியரான தந்தை, மகனுக்கு நல்ல வழிகாட்டி யாக விளங்கினார். அறிவியலும் சமூகமும் ஒன்றிணைந்து முன் னேற வேண்டும் என்ற எண் ணத்தை மகனிடம் விதைத்தார். சிறு வயதிலேயே இவருக்கு உயிரி யலில் அதிக ஆர்வம் உண்டானது.
l இயற்கை விஞ்ஞானத்தில் 1931-ல் பட்டம் பெற்றார். அடுத்த சில ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி, டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சக அறிவியல் வல்லுநர்களுடன் இணைந்து, ‘இ கோலி லாக் ஓபரான்’ ஆய்வை மேற்கொண்டார்.
l கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் அறிவியல் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். 1941-ல் இயற்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். கேலக்டோசிடேஸ் எனப்படும் என்சைம் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பாஸ்டர் கல்வி நிறுவனத்தின் செல் உயிரி வேதியியல் துறை தலைவராக 1954-ல் பொறுப்பேற்றார்.
l நோய் எதிர்ப்பாற்றல் துறை வல்லுநர் மெல்வினுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். செரிமான நொதியை உற்பத்தி செய்யத் தேவைப்படும் வினையைத் தூண்ட ஒரு உள் சமிக்ஞை செயல்படுவதை 1943 ல் இவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளை தொகுத்து பொதுவான தூண்டல் கோட்பாட்டை வெளியிட்டனர்.
l சோர்போன் பல்கலைக்கழகத்தில் வளர்சிதை வேதியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். மரபுசார் தன்மைகள், சூழல் தொடர்பான நொதி தொகுப்பின் செயல்பாடு குறித்து விஞ்ஞானி ஜேக்கப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு தான் புரோட்டீன் தொகுப்பு மாதிரியை இவர்கள் உருவாக்க வழிவகுத்தது.
l டிஎன்ஏ இழையின் தொடக்கத்தில் உள்ள ஓபரான் என்ற மரபணு தொகுப்பு, அதன் தற்போதைய சூழலுக்குத் தேவைப்படும் ஒரு குறிப் பிட்ட புரதத்தை உற்பத்தி செய்வதற்கான சமிக்ஞையை அனுப்பு கிறது என்பதையும் கண்டறிந்தனர். ஆபரேட்டர், கட்டமைப்பு மரபணு என்ற 2 முக்கியமான மரபணுக்களையும் கண்டறிந்தனர்.
l ஜீன்கள், நொதிகளை உருவாக்குவதன் மூலம் செல்களின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பை இவரோடு இணைந்து பிரான்கோயிஸ் ஜேக்கப், ஆண்ட்ரே லூஃப் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்த உலகுக்கு வழங்கினர். இந்த கண்டுபிடிப்புக்காக 1965-ல் இவர்கள் மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
l பல நூல்களை எழுதியுள்ளார். நவீன உயிரியல் சம்பந்தமாக இவர் எழுதிய நூல் விற்பனையில் சாதனை படைத்தது.
l இவர் சிறந்த இசைக் கலைஞரும்கூட. இசையும் படகு சவாரியும் இவரது விருப்பமான பொழுதுபோக்குகள். கலை மற்றும் அறிவியலின் ஏறக்குறைய அனைத்துப் பிரிவுகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியத்திலும் நாட்டம் கொண்டவர். அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
l உயிரியல் துறை ஆராய்ச்சிகளுக்காக பல பரிசுகள், விருதுகளை பெற்றவர். மூலக்கூறு உயிரியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 66-வது வயதில் (1976) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்