வலைஞர் பக்கம்

கடித மொழியற்றுப் போன காலம்

எஸ்.வி.வேணுகோபாலன்

தமக்கு வந்த கடிதங்களை

இன்றும் பெட்டியில்

பாதுகாத்து வைத்திருக்கிறார் அப்பா..

ஒரு காலை நீட்டியும் மற்றதை மடித்துக் கொண்டும்

தரையில் அமர்ந்து

வாழ்க்கைப் போராட்டங்களை முணுமுணுத்தபடி

கல் எந்திரத்தில் மாவு அரைக்கையில்

ஓரங்களை வழித்துப் போட

அஞ்சலட்டைகளைப் பயன்படுத்திக் கொள்வாள் பாட்டி

மரண சேதியைக் கொண்டுவந்தவை

வாசித்த மாத்திரத்தில் கிழிபட்டுப்போக

எஞ்சிய கடுதாசிகள்

குத்தியிருக்கும் கம்பியை

எரவாணத்தில் செருகி வைத்திருந்த தாத்தா

ஒருபோதும் அவற்றை

மீண்டும் எடுத்துப் பிரித்ததில்லை

கடிதம் எழுதுதலைப்

பள்ளிக்கூடத் தேர்வோடு

கழற்றி வீசும் காலத்தில்

மின்னஞ்சல்களில் நிரம்புவதையும்

அலைபேசியில் நெரிபட்டு

உறுத்தும் குறுஞ்செய்திகளையும்

படிக்கவோ

பதில் போடவோ

அசை போடவோ

சேமித்து வைக்கவோ - ஏன்

அழித்துப் போடவோ கூட

நேரமற்றுத் திரிகின்றன

நட்பும் உறவும் தொலைத்துத்

தேடிக் கொண்டிருக்கும் தலைமுறைகள்.

SCROLL FOR NEXT