மழை நின்று பத்து நாட்களுக்கும் மேல் ஆகிறது. நான் வீட்டைவிட்டு குழந்தைகளுடன் வெளியேறியும். இன்றுவரை என் வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை.
நான் இருக்கும் தளத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும், கீழ்த் தளத்தில் சூழ்ந்த தண்ணீரால் வீட்டில் இருக்கும் ஒரு பொருளையும் எடுக்க முடியவில்லை. 10 நாட்களுக்கும் மேலாக இரண்டு செட் துணிகளையே கந்தையாகும்வரை கசக்கி உடுத்திக்கொண்டிருக்கிறேன். நான் வெளியேறிய அன்று மழைநீராக இருந்தது இன்று சாக்கடை நீர். என்னென்ன கழிவுகள் உலகத்தில் உண்டோ அவையனைத்தையும் தாங்கி நிற்கிறது வளசரவாக்கத்தின் பல தெருக்களில் தேங்கியுள்ள நீர். வளசரவாக்கம் மட்டுமில்லை; ஆற்காடு சாலையின் (குறிப்பாக வடபழனியிலிருந்து போரூர் வரை) பல இடங்களில் மிக மோசமான நீர்த்தேக்கங் களையும், குழிகளையும் கொண்டிருக்கிறது.
இன்று என் வீட்டுக்குச் செல்லும் ஆசையில் தெரியாத்தனமாக அந்த மரணச் சாலையை உபயோகிக்க வேண்டியதாகியது. ஒருவழியாக உயிர் தப்பி லாமெக் தெருவில் நுழைந்தால் (மாலை ஏழு மணி இருக்கும்), பத்திருபதடி தாண்டி பொட்டு வெளிச்சம் இல்லை. பின்னால் வரும் வாகனங்களின் உபயத்தில் செல்லலாமென்றால், நெடுமாறன் வீட்டிலிருந்து நான் குடியிருக்கும் தெருவையும் தாண்டி நீர்த்தேக்கம் ஒருதுளிகூட வடியவில்லை. மழை பெய்த நாட்களில் சிலமுறை அதில் நடந்து, பள்ளங்களில் காலைவிட்டு உயிர் பிழைத்திருந்ததால் (இதில் ஒவ்வொரு தெரு முனையிலும் ட்ரான்ஸ்ஃபார்மரும், மின்கம்பங்களும் வேறு) அந்த இருட்டில் அதில் காலை வைக்க எனக்கு சத்தியமாகத் தைரியமில்லை.
ஜானகி நகர், மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் இருக்கும் வீடுகளிலிருந்து இத்தனை நாள் அடைத்துக்கொண்டிருந்த அவர்கள் வீட்டுக் கழிவறைத் தொட்டி யைத் தெருக்களில் அப்படியே திறந்துவிட்டிருக் கிறார்கள்.
அங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமா துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள், அல்லது பெரும் பணக்காரர்கள். அவர்கள் அவ்வீட்டில் வசிப்பதில்லை. அதனால், அவர்கள் வீட்டின் காவலாளர்கள், மற்ற வேலை செய்பவர்கள் மூலம் தங்கள் வீட்டுச் சாக்கடையைத் தெருவில் கொட்ட ஏற்பாடு செய்திருக்கின்றனர். துப்புரவுத் தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்தத் தெருக்கள் பக்கம் வரக் கூடாது. வரவே கூடாது. எந்த உதவியும் செய்யக் கூடாது. ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்களைத் தெருவில் இறக்கி அனைவரும் சேர்ந்தே அத்தெருக்களைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டும். எத்தனைப் பட்டாலும் புத்திவராத மனிதகுலத் திலகங்களில் வளசரவாக்கக் குடியிருப்பு வாசிகளுக்கு (என்னையும் சேர்த்துத்தான்) முதன்மையிடம் தரலாம்.