லாரியிலிருந்து பெட்டிகளை வரிசையாக கைமாற்றிக் கொடுத்தபடி 18 பேர் சேர்ந்த பெரிய குழுவொன்று முகாமில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களில் நித்யானந்தம் என்பவரை தனியே அழைத்து விசாரித்தபோதுதான் தெரிந்தது அந்தக் குழுவின் பெயர் 'புலி'.
''சார். நாங்க எல்லாரும் திருவல்லிக்கேணிதான் சார். ரத்னா கபேவுக்கு பின்பக்கம் சிவசக்தி விநாயகர்குழுன்னு ஒரு டீம் முதல்ல உருவாக்கியிருந்தோம். கனமழை அன்னிக்கு பசியோடிருந்தவங்களுக்கு உடனடியாக ஏதாவது உதவி செய்யணும்னு முடிவு செஞ்சோம். இருபதே நிமிஷத்துல முப்பது ஆயிரம் ரூபா கலெக்ட் பண்ண முடிஞ்சது.
அதைக்கொண்டுபோய் வேளச்சேரி பகுதிகள்ல வீடுகள்ல தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் உணவுப் பொட்டலங்கள் வழங்கினோம். நாங்க செய்யறதைப் பார்த்த ஒருத்தர் கோயம்பேட்ல ஹோல்சேல்ல வாழைப்பழ மண்டி வச்சிருக்கறார். அவர் உதவி செய்ய முன்வந்தார். அவர் மூலமா இருபதாயிரம் பேருக்கு வாழைப்பழம் வண்டியில் கொண்டுபோய் கொடுக்க முடிஞ்சது.
எங்கள் குழுவின் தலைவர் பிரவீன் வீடு மயிலாப்பூர்ல இருக்கு. அவரது சுறுசுறுப்பு பொதுநலன்களில் அக்கறைக்காக அவரை நாங்கள் புலி என அழைப்பது உண்டு. அதனாலேயே இக்குழுவுக்கு புலிக் குழு என பெயர் வைத்தோம். சிட்டி சென்டர் பின்பக்கம் இருக்கற அவரது வீடு தண்ணீரில் மூழ்கிவிட்டது. இந்த நிலையிலதான் அவர் எங்களையெல்லாம் ஒன்னு திரட்டினாரு. எங்க ஃப்ரண்டோட அப்பா பாக்கியராஜ் மூலமாக பாரதி சார் அறிமுகம் கெடைச்சது.
தூங்கறதுக்காக வீட்டுக்கேபோறதில்லை. தூக்கம், வேலை எல்லாம் இங்கதான். இரவில் பொருள்கள் அடுக்கற வேலை. பாரதி சாரின் அன்பான வார்த்தைகள் எங்களை உற்சாகப்படுத்துது. அவர் இதை செய் அதை செய்னு கட்டளை இடறதில்லை. இங்கிருக்கும் வேலைகளை நாங்களே பகிர்ந்துக்கறோம். ப்ரியா மேம், கோமதி மேம், பாக்யராஜ் சார் போன்றவர்களின் அன்பான வார்த்தைகளும் எங்களை உற்சாகப்படுத்துது.
\
புலிக்குழு தலைவர் பிரவீன் | படம்: பாலாஜி ஹரி
எங்கள் குழுவுல பதினைஞ்சி நாளா டாக்டர் மகாதீர் முகம்மதுவும் இங்க இருக்கிறாரு. டிடி தடுப்பூசி போடறது, மழையில வரும் சேத்துப்புண்ணுக்கு மருந்து காம்ப்பில் யாருக்காவது அடிப்பட்டால் சிகிச்சைகளை ரொம்ப ஆர்வத்தோடு செய்யறாரு.
எங்க வீட்லஎல்லாம் எங்களை என்கரேஜ் பண்றாங்க. யாரையும் போகவேணாம், உதவிப்பணிகள் செய்யவேணாம்னு சொல்றதில்லை. போய் ஹெல்ப் பண்ணு அப்படின்னுதான் சொல்றாங்க. நான் ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு வேளை பூஜை செய்யணும். இங்க தொடர்ந்து இருக்கும் வேலைங்க காரணமா ஒரு வேளை பண்ணா போதும்னு சொன்னாங்க.''
புலிக் குழுவைச் சேர்ந்த 18 பேரும் ''ஆமா சார் எல்லார் வீட்லயும் அப்படித்தான்'' அதே உற்சாகத்தோடு வழிமொழிந்தனர்.
அப்போது, அவசர அவசரமாக ஒரு சேதி சொன்னார் புலிக்குழுத் தலைவர்... "சார், நான் அஜித் ரசிகர்!"