கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை, வென்டிலேட்டர்கள் தேவை, மருத்துவப் படுக்கைகள் தேவை என்ற துயரக் குரல்கள் தற்போது குறைந்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் வேகம் எடுத்த கரோனா இரண்டாம் அலை அதன் உண்மை முகத்தை இந்தியாவுக்கு அறியச் செய்து சுகாதாரத் துறையையே நிலைகுலையச் செய்தது.
கடந்த சில மாதங்களாக இந்திய அளவில் தினசரி கரோனா தொற்று சுமார் 4 லட்சம் வரை தாண்டிய நிலையில், பலியோ 4 ஆயிரத்தைக் கடந்தது. மருத்துவமனைகளை சூழ்ந்த ஆம்புலன்ஸ்கள், மயானங்களில் தங்களது அன்பானவர்களின் உடல்களுடன் வரிசையில் நின்ற மக்கள், வரிசையின் நிற்க வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற அச்சம் தந்த செய்தி காட்சிகள் தற்போது இல்லை.
ஊரடங்குகள், தடுப்பூசிகள், மக்கள் பெரும் திரளாகக் கூடுவதைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கை காரணமாக இந்தியாவில் ஜூன் மாதம் முதலே கரோனா குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவானர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,224 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,542 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நேற்று 11,805 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 267 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளதைக் கணிக்க முடிகிறது. எனினும் நாம் கரோனா தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதை உணர்ந்து அரசுக்களும், மக்களும் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருப்பது அவசியமாகிறது.
கரோனா இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டது, இனி கரோனா இல்லை என்று கடந்த முறை மாதிரி கவனமில்லாமல் இருந்துவிட வேண்டாம் என்று நாட்டின் பல்வேறு மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கையையும் அவ்வளவு சுலபமாக நாம் கடந்துவிட முடியாது. இந்நிலையில் 10 அம்சங்களைக் கவனமுடன் கடைப்பிடித்தால் கரோனா தொற்று வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கவனமுடன் கடைப்பிடிக்க வேண்டிய 10 அம்சங்கள்:
* தேவையின்றி வெளியே சுற்றுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஊரடங்கு தளர்வுகள் இருந்தாலும் தேவை கருதி மட்டுமே வெளியில் வருவோம்.நோய்ப் பரவல் தவிர்ப்போம்.
* வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். இரட்டை முகக்கவசம் அணிந்தால் இன்னும் நல்லது. மூக்கு, வாயை மூடும்படி முகக்கவசம் அணிய வேண்டும். தாடைக்குக் கீழே அணியக் கூடாது.
* இருமல், தும்மல் வந்தால் முழங்கையை மடக்கியோ அல்லது கைக்குட்டை, டிஷ்யூ பேப்பரால் வாயை மூடிக்கொண்டோ இரும, தும்ம வேண்டும்.
* கைகளில் கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றை அன்றாட வேலைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும். கை கழுவுவதை முறையாகச் செய்ய வேண்டும்.
* பள்ளிகள், அலுவலங்கள், வழிபாட்டுத் தலங்கள், காய்கறிக் கடைகள் எனப் பொது இடங்களில் கூடும்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
*அலட்சியம் அறவே கூடாது. தொண்டை வலி, காய்ச்சல் என லேசான அறிகுறி இருந்தாலும் மருந்துக் கடைக்குச் செல்லாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* தடுப்பூசி குறித்த தயக்கங்களைக் களைவோம். எதிர்மறைச் சிந்தனைகள், மூட நம்பிக்கைகளை மூலையில் வைத்து ஒதுக்குவோம். அறிவியலை முழுமையாக நம்புவோம். தடுப்பூசியே தீர்வு என்பதில் உறுதியாக இருப்போம்.
* கரோனா எங்கும் செல்லவில்லை நம்முடன்தான் இருக்கிறது. நாம் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் கரோனா ஒழிந்துவிடாது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் கரோனா ஒழியும் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து பிறருக்கும் வலியுறுத்துவோம்.
* தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கரோனாவை வெல்லவும் உறுதி ஏற்போம். அரசின் செயல்பாடுகள், தடுப்பூசி பாதுகாப்பு தாண்டி கட்டுப்பாடுகளை மீறாமல் தொடர்ந்து பின்பற்றுவோம்.