வலைஞர் பக்கம்

சௌகார் ஜானகி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

தென் இந்திய குணச்சித்திர நடிகை

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி (Sowkar Janaki) பிறந்த நாள் இன்று (டிசம்பர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் (1931) பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் படித்தார். குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

l வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார். வானொலி நாடகத்தைக் கேட்ட சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தார். இதில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், உறவுக்காரப் பையனுக்கு இவரை மணமுடித்து வைத்தனர்.

l கணவருடன் விஜயவாடாவில் வசித்தார். அவர் வேறு நல்ல வேலை தேடி, சென்னைக்கு வந்தார். சினிமா ஆசை துளிர்த்ததால் இவரும் சென்னை வந்து, தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சந்தித்தார். தன் தம்பி நாகிரெட்டியிடம் அவர் சிபாரிசு செய்தார்.

l விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். தோற்றமும், நடிப்பும் இயல்பாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இதனால் ‘செளகார் ஜானகி’ ஆனார்.

l மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வளையாபதி’ படத்தில் பாரதிதாசன் எழுதிய வசனத்தைப் பேசி நடித்தார். தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் கொண்ட இவர், ‘பாக்கியலட்சுமி’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’ என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

l ‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. சோகக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பே அதிகம் கிடைத்தாலும், காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்.

l தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க் கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

l எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்தவர். 300-க்கும் மேற்பட்ட முறை மேடையேறியவர். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்தார். சமையல், தோட்டக் கலையில் வல்லவர்.

l சென்னையில் 1965-ல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால் தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

l ரசிகர்களிடம் இருந்து உண்மையான அன்பையும், மரியாதையையும் இத்தனை ஆண்டுகளாக பெற்றுவரும் நான் உண்மையில் ‘சௌகார்’தான் (பணக்காரன்) என்பார். 85-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் செளகார் ஜானகி இன்றும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT