மறைந்த அசல் ஓவியக் கலைஞர் -இளைய தலைமுறை ஓவியர் இளையராஜா பற்றி ஓவியக் கலைஞரும், திரைப்படக் கலைஞருமான நடிகர் சிவகுமார் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
1959-1965 காலகட்டத்தில் ஓவியக் கல்லூரியில் நவீன ஓவியங்கள் தீட்டும் மாணவர்களே ஊக்குவிக்கப்பட்டனர். காரணம் உலகெங்கிலும் பிகாசோவின் அலை அடித்துக் கொண்டிருந்த நேரம்.
அசல் ஓவியம் தீட்டுவோர் அலட்சியப்படுத்தப்பட்டனர். ஓவிய ஆசிரியர் அந்தோணிதாஸும், சுரேந்திரநாத்தும் பின்னாளில் முதல்வரான எனக்கு 3 ஆண்டு சீனியர் மாணவராக இருந்த அல்பான்ஸ் மட்டுமே எனது அசல் பாணி ஓவியங்களைப் பாராட்டி ஊக்குவித்தனர்.
அடுத்த பத்து ஆண்டுகளில் வந்த ஓவியர்களில் மணியம் செல்வன் போன்ற ஒரு சிலரே அசல் ஓவியங்களைத் தீட்டினர்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஓவியர் மனோகர் கல்லூரி முதல்வராக இருந்த போது ஓவியக்கலை பயின்றவர் இளையராஜா.
ஆனந்த விகடனில்தான் அவரின் அசல் ஓவியங்களை இவ்வளவு அழகாக ஒரு இளைஞர் தீட்டுகிறாரே, விகடன் ஆதரிக்கிறதே என்று இளையராஜாவின் வாட்டர் கலர் -ஆயில் பெயிண்ட் ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்து இளையராஜாவைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன்.
2016-ல் லலித்கலா அகாடமியில் எனது ஓவியக் கண்காட்சி 5 நாட்கள் நடந்தபோது, நான் பார்க்க ஆசைப்பட்ட இளையராஜா, என் எதிரில் நின்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
‘‘ஒவ்வொரு கோயிலுக்கும் நேரில் போய் 8 மணி நேரம், 10 மணி நேரம் நின்று எங்களால் உங்கள் ஓவியம் போல் வரைய முடியாது. உங்களது காந்தி ஓவியயும், செல்ஃப் போர்ட் ரெயிட்டும் லைன் டிராயிங்கில் மாஸ்டர் பீஸ். என்னைப் போன்றோர் கிராமியப் பின்னணியில் அழகிய இளம் பெண்கள், சமைப்பது, கோலம் போடுவது, குழந்தையைக் கொஞ்சுவது, பூத்தொடுப்பது போல மாடல்களை வைத்த நல்ல ஒளிப்பதிவில் புகைப்படங்கள் எடுத்து அதைப் பார்த்துத்தான் நிதானமாக வரைகிறோம். எங்களுக்கு நீங்களெல்லாம் முன்னோடி!’’ என்றார்.
எனினும் அசல் ஓவியம் தீட்டும் முறை ஒழிந்துபோகும் என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு என் மகனே பிறந்து என் கனவுகளை நிறைவேற்றுவது போல இளையராஜா நமது பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மணத்தை விளக்கும் படங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றுக் கொண்டிருந்தவனை காலன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துப் போவான் என்று சிறிதும் எண்ணவில்லை.
கரோனாவின் மிகப்பெரிய கொடிய செயல் இது. அவனின் அற்புதப்படைப்புகள் வழி, என் ஓவிய வாரிசு இளையராஜா என்றும் வாழ்ந்து கொண்டிருப்பான்.