வலைஞர் பக்கம்

ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் 6

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்

உலகத் திருமறையாம் திருக்குறளில் எனக்குப் பிடித்தமான சில குறள்கள் உள்ளன. இவற்றை எனக்குப் பிடிக்கக் காரணம்.. என் வாழ்க்கையின் சில நிகழ்வுகளுடன் இவை தொடர்புகொண்டவையாக இருந்ததுதான். எனவே அந்தக் குறள்களை இங்கே என் அனுபவங்களுடன் விளக்க முற்படுகிறேன்.

குறள்

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல் (676)

பொருள்:

நாம் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயல் வெற்றி பெறுமா, அல்லது இடையூறுகளால் தடைபடுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டும். மேலும், அந்தச் செயலால் விளைவது நல்லதா, கெட்டதா என்றெல்லாம் ஆராய்ந்த பின்னரே செய்ய வேண்டும்.

விளக்கம்:

1960-களின் தொடக்கத்தில், இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் தோற்றுநர் என்னும் புகழுக்குரிய பேராசிரியர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுக்காக ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். கேரளத்தில், தும்பா என்ற இடத்தை அவர் தேர்ந் தெடுத்தார். அந்த இடம், புவியின் காந்தவியல் நடுகோட்டுக்கு அருகில் இருந்தது. எனவே, வளிமண்டலத்தின் உயரடுக்குகளில் ஆய்வு நடத்துவதற்கு அந்த இடம் ஏற்றது. ஆனால், அந்த இடத்தில் மீனவ மக்கள் வாழ்ந்ததுடன் புனித மேரி மேக்லீனா தேவாலயம், ஆயர் மாளிகை, பள்ளிக்கூடம் ஆகியவை இருந்தன. தேவாலய ஆயரை விக்ரம் சாராபாய் சந்தித்து அந்த இடத்தை கேட்டபோது ‘‘என் குழந்தைகளின் வசிப்பிடத்தையும் கடவுளின் வசிப்பிடத்தையும் கேட்கிறீர்களே, எப்படி சாத்தியம்?’’ என்று கேட்ட ஆயர், மறுநாளே சாராபாயைத் தேவாலயத்துக்கு வரும்படி அழைத்தார்.

பிரார்த்தனைகள் நிறைவடைந்த காலைப் பொழுது. விக்ரம் சாராபாயைக் கூட்டத்தினரிடம் அறிமுகம் செய்தார் ஆயர், ‘‘இவர் ஒரு விஞ்ஞானி. நாம் எல்லோருமே விஞ்ஞானத்தின் பயன்களை அனுபவிக்கிறோம். இந்தத் தேவாலயத்தில் மின்சார வெளிச்சத்தைப் பயன்படுத்துகிறோம். நான் பேசுவது உங்களுக்குத் தெளிவாகக் கேட்க இந்த ஒலிபெருக்கிப் பயன்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்க்கை தரத்தையும் வசதிகளையும் உயர்த்துகின்றன. நான் ஒரு போதகராக என்ன செய்கிறேன்? உங்களுக்காக, உங்களுடைய நன்மைக்காக, உங்களுடைய அமைதிக்காக நான் பிரார்த்திக்கிறேன். இன்னும் சுருங்கச் சொன்னால் விக்ரம் சாராபாயும் நானும் செய்வது ஒரு வகையில் ஒன்றே.

இருவருமே மனித குல நன்மைக்காகப் பணிசெய்கிறோம். அடுத்த ஓராண்டுக்குள் கடற்கரையோரத்தில் நமக்கான மாற்று இருப்பிடத்தைக் கட்டிக் கொடுப்பதாக விக்ரம் சாராபாய் கூறுகிறார். குழந்தைகளே… இப்போது நீங்கள் சொல்லுங்கள், நம்முடைய வசிப்பிடத்தை விஞ்ஞானத்தின் உயர் பணிகளுக்காகக் கொடுக்கலாமா?’’ என்று கேட்டார்.

அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து ‘‘ஆமென்’’ என்றனர். பல்வேறு விண்வெளி மற்றும் தொழில்நுட்பச் செயல்பாடுகளின் விதைக்களமாக அந்தத் தேவாலயம் உருமாறியது.

குறள்

வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று (678)

பொருள்:

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது, அந்தச் செயலில் ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்களை அணுகி, அவர்களுடைய அனுபவ அறிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதரிடத்துப் பழகிய யானையைக் கொண்டு பழக்கப்படாதக் காட்டு யானையைப் பிடிப்பதைப் போல, ஒரு செயலை செய்யும்போதே மற்றுமொரு செயலையும் முடித்துக் கொள்ளவும் வேண்டும்.

விளக்கம்:

ராக்கெட் விஞ்ஞானியான நான் இந்திய ராணுவ அமைச்சகத்தில் வேலையில் இருந்தேன். பின்னர் பெங்களூருவில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனது இயக்குநர் ஹோவர்கிராஃப்ட் (Hovercraft) திட்டத்தைப் பற்றி எனக்கு ஓர் அறிவுரை செய்தார். உடனே அந்தத் திட்டத்தில் முழுமூச்சுடன் பணியாற்றத் தொடங்கினேன். ஆனால், ஹோவர்கிராஃப்ட் திட்டத்தைப் புதிய வடிவில் மாற்ற வேண்டியிருந்தது. அதில் உள்ள Propeller அமைப்பை எளிதாகச் சுழலும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். எனக்கு வழக்கமான வடிவம் மட்டுமே தெரியும். வானூர்தி ஆய்வில் புகழ் பெற்ற பேராசிரியர் சாதிஷ் தாவனைப் போய் பார்த்தேன். அவரிடம் contra Rotating propeller செய்வதில் உள்ள சிரமங்களைக் கூறினேன்.

சதீஷ் தாவன் எனக்கு சனிக்கிழமைதோறும் வகுப்பு எடுப்பதாக உறுதியளித்தார். ஆறு வாரங்கள் தொடர்ந்து சென்று அவரிடம் பல அரிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நல்ல ஆசிரியர் அறிவுபூர்வமாக ஒரு மாணவரைத் தயார்படுத்துவதுடன், தானும் அந்த மாணவரிடம் இருந்து எவ்வாறு அறிவை பெற முடியும் என்பதை கற்றுக்கொண்டேன்.

ஆறு வார வகுப்புகள் முடிந்ததும் அந்த propeller-ஐ நான் தயாரிக்கத் தொடங்கினேன். அதைத் தயாரிக்க வேறு விதமான பொருள் தேவைப்பட்டது. அந்தப் பொருள் வெளியில் கிடைக்காது. சாதீஷ் தாவன் அந்தப் பொருள் எனக்குக் கிடைக்க உதவினார். அதற்குப் பின்னரும் அதன் தயாரிப்பில் சில பிரச்சினைகள் வந்தபோது, அவரையே அணுகினேன். என்னப் பிரச்சினை என்பதை விளக்கி அதைச் செயல்படவைத்தார். இந்த வெற்றி என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நான் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டதுடன், எவ்வளவு தோல்விகள் வந்தாலும் பிரச்சினைகளைக் கண்டு பயப்படாமல் அதை சரிசெய்து வெற்றி பெறவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

- நல்வழி நீளும்…

SCROLL FOR NEXT