வலைஞர் பக்கம்

கரோனாவுக்கு பக்கவிளைவில்லா சிகிச்சை: சித்த மருத்துவத்தில் மதுரை மக்கள் ஆர்வம்

என்.சன்னாசி

தமிழகத்தில் கரோனா முதல் அலையைவிட, 2 வது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் படுக்கை இன்றி பலர் உயிரிழக்க நேரிட்டது. ஆனால், ஊரடங்கு உள்ளிட்ட அரசின் துரித நடவடிக்கையால் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.

கரோனா பாதிப்புக்கு சித்தா, ஆயுர்வேதா போன்ற மாற்று மருத்துவ சிகிச்சைக்கு மதுரை மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் மதுரை பிளாட் புரோமோட்டர்ஸ் அசோஷியேசன் சார்பில், அய்யர்பங்களா பார்க் டவுன்- குலமங்கலம் மெயின் ரோட்டில் நேரு மேல்நிலைப்பள்ளியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை முகாம் மையம் செயல்படுகிறது.

இந்த மையத்தை அமைச்சர் பி. மூர்த்தி, ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கிவைத்தனர்.

100 படுக்கை வசதிகளைக் கொண்ட இங்கு 24 மணி நேரமும் முறையான கவனிப்பு, இலவச சித்தா மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியதாக சிகிச்சை மைய பொறுப்பாளர்களும், புரோமோட்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகளுமான வல்லப்பன், கந்தசாமி, முத்துவேல், மாணிக்கம் ஆகியோர் தெரிவத்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘அமைச்சர் பி. மூர்த்தியின் அறிவுறுத்தலின் பேரில் 100 படுக்கைகளுடன் கூடிய சித்த சிறப்பு சிகிச்சை மையத்தை மே 26ல் துவங்கினோம். 80க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 15 பேர் புதிதாக அனுமதிக்கப்படுகின்றனர். 10 பேர் வரை டிசாஜ் செய்யப்பட்டுகின்றனர்.

இங்கு சிகிச்சை பெறுவோருக்கு முற்றிலும் சத்துள்ள உணவு, காய்கறி சூப், மருந்து மாத்திரைகள் இலவச வழங்கப்படுகின்றன. மருத்துவர்களின் ஆலோசனைகளுடன், நோய் அச்சம் போக்க கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. பாதிக்கப் படுவோர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,’’ என்றனர்.

மதுரை கப்பலூரில் காமராசர் உறுப்புக் கல்லூரி கோவிட் கேர் சென்டரில், கரோனா பாதித்தவர்களுக்காக பிரத்யேகமாக யோகா இயற்கை முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது பற்றி சித்தா மருத்துவர் அமுதா கூறுகையில், ‘‘ தமிழக அரசு சார்பில், இம்மையம் செயல்படுகிறது. இங்கு அனுமதிக்கப்படுவோருக்கு தினமும் காலை, மாலை 10 நிமிடம் சூரியக்குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எதிர்ப்பு சக்தியை கூட்ட காலையில் இஞ்சி, மஞ்சள், துளசி, மிளகு, அதிமதுரம் பானம் வழங்கப்படுகிறது. தூக்கம் அதிகரிக்க அக்குபிரசர் மற்றும் ஓமம், துளசி, எழுமிச்சைபுல், ஆயில் கலந்த நறுமண சிகிச்சை, பிராணயாமம், மூச்சுப்பயிற்சி, யோகா போன்ற பயிற்களும், தினமும் காலை 10 நிமிடம் வெயிலில் நிற்க வைப்பதும் போன்ற இயற்கை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இது நல்ல பலன்களைத் தருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 50 முதல் 75 பேர் உள்நோயாளி கள் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 20 பேர் டிஸ்சார்ஜ் ஆகிச் செல்கின்றனர், ’’ என்றார்.

இதற்கிடையில், மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லிகிரேஸ் ஏற்பாட்டில், சித்தா, ஆயுர்வேத மருந்துகள் அடங்கிய இயற்கை முறையிலான கரோனா தடுப்பு பொடி பாக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது.

கரோனா பாகதித்தவர்கள் 3 நாள் 3 வேளையும், பாதிக்காதவர்கள் முன்னெச்சரிக்கையாக 2 நாள் இரு வேளையும் சாப்பாட்டுக்கு பின் தேனில் கலந்து சாப்பிடவேண்டும் என, தன்னார்வலர் குழு அறிவுறுத்துகிறது. தபால் மூலமும், நேரிலும் வழங்கப்படுகிறது.

98941-91927 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பெயர், முகவரி, அலைபேசி எண்ணை பதிவிட்டால் போதும். கடந்த 45 நாட்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இம்மருந்து வழங்கப்பட்டுள்ளது என, தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சித்தமருத்துவர்கள் கூறுகையில், ‘‘ தொற்று பாதித்தவர்கள் ஆங்கில மருத்துவத்தை நம்பிச் சென்றாலும், சித்தா , ஆயுர்வேதா போன்ற சிகிச்சையிலும் ஆர்வம் காட்டுவதால் மவுசு அதிகரித்துள்ளது,’’ என்றனர்.

SCROLL FOR NEXT