மாற்றுப் பாலினத்தவர் மற்றும் எல்.ஜி.டி.பி.க்யூ.ஐ. பிரிவைச் சேர்ந்த பால் புதுமையர் தாங்களும் சமூகத்தின் ஓர் அங்கமே என்பதை உணர்த்தும் வகையில் 2009 முதல் ஆண்டுதோறும் வானவில் சுயமரியாதைப் பேரணியை நடத்திவருகின்றனர். சென்னையின் 13-வது வானவில் சுயமரியாதைப் பேரணிக்கான கொடியை, சகோதரன் அலுவலகத்தில் திருநங்கைகள், மாற்றுப் பாலினத்தவர் ஏற்றிவைத்தனர்.
அதோடு வானவில் வண்ணங்களில் அமைந்த முகக் கவசங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினர். இதுகுறித்து சகோதரன் தன்னார்வ அமைப்பின் பொது மேலாளர் ஜெயா நம்மிடம் பேசும்போது, “கடந்த ஆண்டைப் போலவே கரோனா பேரிடரால் இந்த ஆண்டும் சுயமரியாதைப் பேரணி மற்றும் மாற்றுப் பாலினத்தவர் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல குழுக்கள் இணைய வழியாகச் சிறுசிறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. ஜூன் மாதத்தின் முதல் நாள் நிகழ்ச்சியை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கும் வண்ணம் கொண்டாட, சகோதரன் அமைப்பு முடிவு செய்தது.
கரோனா தொற்றால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவரும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு முன்களப் பணியாளர்களின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தோழி அமைப்பின் நிறுவனர் சுதா, கட்டியக்காரி நாடகக் குழுவின் நெறியாளர் ஸ்ரீஜித் சுந்தரம், தமிழ்நாடு எல்.ஜி.பி.டி. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண் ஆகியோர் பங்கெடுத்தனர்” என்று தெரிவித்தார்.