நிவாரண முகாமில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு முகம். கள ஆய்வு குறித்த சிந்தனையில் ஒரு முகம். தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஒரு முகம், பொருட்களைக் கையாளும் ஒரு முகம், உழைக்கச் சலிக்காத முகம் என ஏராளமான முகங்கள்.
அதில் சிரிப்பைச் சிந்திக்கொண்டிருக்கும் முகத்துக்குச் சொந்தக்காரராக அபிலாஷ் இருந்தார். சென்னையில் வாழும் அபிலாஷுக்குச் சொந்த ஊர் ஹைதராபாத். மொழி தெரியாவிட்டாலும், வெள்ளத்தின் கோரத்தைப் பார்க்கச் சகிக்காது, வெளியே வந்து களப்பணியாற்றுகிறார்.
இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.
"நான் சென்னையில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்க்கிறேன். ராமாபுரம், மணப்பாக்கத்தில் எங்கள் வீடு. வெள்ளம் வந்த போது மக்கள் எப்படி அவதிப்பட்டார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். வீடு ஐந்தாம் தளத்தில் இருந்ததால், நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் யாருக்கும் உதவ முடியாத நிலை. இணையத்தின் வழியாக தி இந்து செய்துவரும் நிவாரணப் பணிகளைப் பார்த்தேன்.
தன்னார்வப் பணிகளைச் செய்வதற்கு இதுவே சரியான இடம் என்று தோன்றியது. உடனே இங்கு இணைந்து, முடிகிற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இது சிறியது, இது பெரியது என்றெல்லாம் பார்ப்பதில்லை. இந்த காலகட்டத்தில் சின்னச் சின்ன உதவிகள் கூட எவ்வளவு தேவை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் முடித்து, சுத்தப்படுத்துதல், மருத்துவ முகாம்கள் போன்றவை நடத்தப்பட்டால் அதிலும் பங்களிக்கத் தயாராக இருக்கிறேன். சில நாட்களுக்கு அலுவலகத்தில் விடுமுறை விட்டிருக்கிறார்கள்.
வெறுமனே வீட்டில் உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, இங்கே வந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினேன். வீட்டில் மனைவியும், குழந்தையும் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்கும்போது, நிச்சயம் மற்றவர்களுக்கு உதவத்தானே வேண்டும்?"
களப்பணியுடன் போர்வைகள், பாய்கள், பால் பவுடர்கள் என 50 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கித் தந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.