வரலாற்றுப் புரட்டர்கள் திப்பு சுல்தானை மதத் தீவிரவாதியாகச் சித்திரித்து, ‘அவர் இஸ்லாத்தைத் தழுவும்படி 3 ஆயிரம் பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார். அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தற்கொலை செய்துகொண்டனர்’ என்றெல்லாம் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைத்தனர். இந்த நூல் பல மாநிலங்களில் வரலாற்றுப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.
ஒடிஷா ஆளுநராக இருந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய வரலாற்று அறிஞர் பி.என்.பாண்டே இதைப் படிக்க நேர்ந்தது. அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அந்தப் புத்தகத்தை எழுதியவர் மகாபாத்தி யாய டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர்.
சாஸ்திரிக்கு பி.என்.பாண்டே கடிதம் எழுதி இந்தத் தகவலுக்கான ஆதாரம் எங்கே இருக்கிறது என்று கேட்டார்.
சாஸ்திரி பதில் எழுதவில்லை. பல கடிதங்கள் எழுதிய பிறகு மைசூர் கெஜட்டிலிருந்து அந்தத் தகவலைப் பெற்றதாகப் பதில் எழுதினார்.
மைசூர் கெஜட் பாண்டேவுக்கும் கிடைக்க வில்லை. அவர் மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் பிரஜேந்திரநாத் சீலுக்கு எழுதினார். அவர் அந்தக் கடிதத்தை மைசூர் கெஜட்டின் புதிய பதிப்பைத் தயாரித்துக் கொண்டிருந்த பேராசிரியர் ஸ்ரீ கண்டய்யாவுக்கு அனுப்பிவைத்தார்.
3 ஆயிரம் பிராமணர்கள் தற்கொலை செய்துகொண்டது பற்றிய தகவல் மைசூர் கெஜட்டில் எந்த இடத்திலும் இல்லை என்று அவர் பதில் தெரிவித்தார்.
மேலும் தாம் மைசூர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பிரிவு மாணவராக இருந்தவர் என்ற முறையில் அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை என்றும் உறுதி செய்தார்.
ஸ்ரீ கண்டய்யா மேலும் பல தகவல்களைத் தெரிவித்திருந்தார்.
திப்பு சுல்தானின் பிரதம அமைச்சர் பூர்ணய்யா. அவர் பிராமணர். அவருடைய தலைமைத் தளபதி கிருஷ்ணாராவும் பிராமணரே. இது தவிர, திப்பு சுல்தான் ஆண்டு மானியம் வழங்கி வந்த 156 இந்துக் கோயில்களின் பட்டியலையும் அவர் பாண்டேவுக்கு அனுப்பி வைத்தார்.
திப்பு சுல்தான் 3 ஆயிரம் பிராமணர்களைத் தற்கொலை செய்ய வைத்தார் என்ற அண்டப் புளுகு கர்னல் மைல்ஸ் எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் மைசூர்’ என்ற நூலில் இருக்கிறது. சாஸ்திரி அங்கிருந்து அந்தத் தகவலை எடுத்திருக்கலாம் என்று பாண்டேவுக்கு ஸ்ரீகண்டய்யா எழுதினார்.
கர்னல் மைல்ஸ் தமது ‘ஹிஸ்டரி ஆஃப் திப்பு சுல்தான்’ என்ற நூல் விக்டோரியா மகாராணியின் தனி நூலகத்தில் உள்ள பாரசீகக் கையெழுத்துப் பிரதியின் மொழிபெயர்ப்பு என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ஸ்ரீகண்டய்யா கூறினார்.
ஆனால், விசாரித்துப் பார்த்ததில் விக்டோரியா மகாராணியின் நூலகத்தில் அப்படி ஒரு கையெழுத்துப் பிரதியே கிடையாது என்று தெரிந்தது. இதன் வாயிலாக கர்னல் மைல்ஸின் நூலில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் புனைந்துரைத்த பொய்கள் என்று தெரியவந்தது.
இப்பொய்கள் திப்பு சுல்தான் மீது இந்துக்களின் இதயத்தில் வெறுப்பையும் பகைமையையும் உண்டாக்கத் திட்டமிட்டுப் புனைந்துரைக்கப்பட்டவை என்பது வெளிப்படை.
ஆங்கிலேயர் விதைத்த இத்தகைய நச்சு விதைகள் வளர்ந்து இன்று மரங்களாக வேரூன்றி நிற்கின்றன.
டாக்டர் சாஸ்திரியின் பொய்யோடு வங்காளம், அஸாம், பிஹார், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர்நிலைப் பள்ளிகளில் வரலாற்றுப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.
பாண்டே இது தொடர்பாகக் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் செளத்ரியை அணுகி, தாம் திரட்டிய தகவல்களைத் தெரிவித்தார். அந்நூல் பாடத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டது.
காந்தியடிகளை ஆசிரியராகக் கொண்ட ‘யங் இந்தியா’ என்ற இதழில் 23.01.1930) 31-ஆம் பக்கத்தில் இந்த சம்பவம் பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
திப்பு சுல்தான் ஒரு மத வெறியர் என்றும், அவர் தன் ஆட்சிக்குட்பட்ட இந்துக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்கள் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார் என்றும் வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சித்திரிக்கின்றனர். ஆனால், உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் அல்லர். மாறாக அவர் இந்துக் குடிமக்களிடம் சுமுகமான நல்லுறவு கொண்டிருந்தார்.
திப்பு சுல்தான் சிருங்கேரி மடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியாருடன் சுமுக உறவு கொண்டிருந்தார்.
பரசுராம் பாவ் என்ற மராத்தியன் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த கோயிலுக்கும் சேதம் ஏற்படுத்தினான். சிருங்கேரி யிலிருந்த பிராமணர்களையும் மற்றவர்களையும் அடித்துத் துன்புறுத்தினான். பலரைக் கொன்றான். ஸ்ரீசாரதாதேவியின் விக்கிரகத்தையும் அகற்றி னான். மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு மடத்திற்கு வேண்டிய பொருட்களை அனுப்பி வைத்தார். இடிந்த கோயிலையும் புதுப்பித்தார். ஸ்ரீ சாரதாதேவியின் சிலை அமைக்கவும் உதவினார்.
‘இத்தகைய புனிதத் தலங்களில் அக்கிரமம் செய்யும் பாவிகள் விரைவில் அதன் பலனை அனுபவிப்பர். குருக்களுக்கு எதிராகச் சதி செய்வோர் குடும்பத்தோடு அழிந்துபோவர்’’ என்று திப்பு இதைப் பற்றிய தம் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்.
சிருங்கேரி மடாதிபதி காஞ்சி வந்தபோது திப்பு அங்கே இருக்கும் கோயில்களுக்கு அளித்த மானியங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
சிருங்கேரி மடாதிபதிக்குத் திப்பு சுல்தான் எழுதிய 30 கடிதங்கள் மைசூர் தொல்பொருள் மையத்தில் உள்ளன.
அவற்றுள் ஒரு கடிதத்தில், தமது நலனுக்கும் பிரபஞ்சத்தின் நலனுக்கும் தவம் செய்யுமாறு சங்கராச்சாரியாரை வேண்டியுள்ளார்.
ஸ்ரீவெங்கட்ரமணா, ஸ்ரீநிவாஸ், ஸ்ரீ ரங்க நாதர் பெயர்களில் உள்ள கோயில்கள், மேலும் திப்பு அரண்மனையின் மேற்பார்வையிலுள்ள கோயில்கள், மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களுக்குத் திப்பு சுல்தான் ஏராளமான நிலங்களை, ஆடம்பரமான காணிக்கைகளை வாரி வழங்கியுள்ளான். இவற்றிற்கான ஆவணங் கள் இன்றும் உள்ளன.
திப்பு சுல்தான் 1786, 1790-ஆம் ஆண்டுகளில் மதுரை வந்தபோது அப்போது எழுந்தருளியிருந்த 282-ஆம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பாம்பணி நாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளைத் தரிசித்து உரையாடியதோடு, ஆதீன பூசைக்குரிய வெள்ளித் தாம்பாளங்கள், தோல் முரசு, வெள்ளித் திருச்சின்னம், புனுகு, ஜவ்வாது, உயர்ந்த வகை அரபு நாட்டு அத்தர் வகைகள், வெள்ளி வாள் ஆகியவற்றைச் சமர்பித்தார். ஓர் ஆண் யானையையும் தனது அன்புப் பரிசாக அளித்து மகிழ்ந்தார்: இது மதுரை ஆதீன வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. (மதுரை ஆதீன வரலாறு, பக்கம்:75)
திப்பு சுல்தான் இந்துக்களோடு நேச பாவத் தோடு பழகியவர். சிருங்கேரி மடாதிபதியை மதித்ததோடு, அந்த மடத்திற்குத் தேவைப்பட்ட உதவிகளையும் செய்தவர். பல இந்துக் கோயில்களுக்கு மானியம் அளித்தவர். பிராமணர்களைப் பிரதம அமைச்சராகவும், தளபதியாகவும் வைத்து அழகு பார்த்தவர்.
அத்தகைய மாமனிதரைத்தான் ஆங்கிலேயப் புரட்டு வரலாற்றாசிரியர்கள் மதவெறியர், பிரா மணர்களைக் கொன்றவர், கோயில்களை இடித் தவர் என்று பொய்களால் புனைந்துரைத்துள்ளனர்.
ஆங்கிலேயர்கள் இந்துக்களையும், முஸ்லிம் களையும் பிரிப்பதற்காகப் புனைந்துரைத்த பொய் நூல்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்தெறிவதில் இந்தியர் இன்னும் வெற்றி பெறவில்லை.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை ஆள்வதற் காகப் பிரித்தார்கள். இன்றும் மதவெறியர்கள் அதே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். அதற்காக ஆங்கிலேயர்கள் இட்டுக்கட்டிய பொய் நூல்களையே தங்களுக்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.
இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக இரண்டு கரங்களைப் போல இணைந்து உழைக்க வேண்டிய இரண்டு சமுதாயங்களை விஷக் கருத்துகளால் பகைமைகொள்ளச் செய்வது மிகப் பெரிய தீங்கையே விளைவிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்வது நல்லது!
- இன்னும் முத்துக் குளிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: Kavikko2003@yahoo.com