'தி இந்து' நிவாரண முகாம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே பணியாற்றி வருகிறார் அப்பல்லோ வித்யாஷ்ரமம் சிபிஎஸ்சி பள்ளி ஆசிரியர் அந்தோணிசாமி விக்டர். பாடி, கலெக்டர் நகரில் அவரது வீடு. மனைவியும் வேறொரு பள்ளியில் பணியாற்றிவருபவர்.
''கனமழைக்கு பிறகான நாளில் உடனடியாக சுற்றிலும் உள்ள வீடுகளை அணுகி ஆடைகளை வாங்கிச் சேர்த்தோம். மனைவி பணியாற்றும் பள்ளி ஆசிரியைகளை அணுகி நிறைய புடவைகளை வாங்கிகொண்டுவந்தார்.
நாங்கள் இருவரும் அரும்பாக்கம் அருகில் உள்ள ஸ்கைவாக் அருகிலுள்ள வடிகால் பகுதிவாழ் குடிசைப்பகுதி மக்களிடம் சென்று எங்களிடம் சேர்ந்த பொருள்களை கொடுத்து உதவினோம். அங்குள்ள மக்கள் எங்களுடைய பொருள்களெல்லாம் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது என அழுதனர். ஆனால் எங்களால் தொடர்ந்து உதவமுடியவில்லை.
பின்னர்தான் 'தி இந்து' அறிவிப்பைப் பார்த்து உடனடியாக அணுகி இந்த நிவாரணப் பணிகளில் இணைந்துகொண்டேன். இங்கு பல தன்னார்வலர்களைப் பார்க்க முடிந்தது.
மணலி, அரும்பாக்கம், வில்லிவாக்கம் சிட்கோ, பள்ளிக்கரணை, தி.நகர், பனகல் பார்க் போன்ற இடங்களில் நிவாரணப் பொருட்களை கொடுத்தோம். பிஸ்கட் பாக்கெட், பேஸ்ட், பிரஸ், நாப்கின்கள், ஆடைகள், போன்ற நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்துவருகிறோம்.
தி.நகர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் பொருட்களையும் உணவையும் கொடுத்தோம்.
மணலியைப் பொருத்தவரை இன்னும் தண்ணீர் வடியவில்லை. என்றாலும் அவர்களிடம் எந்த பதற்றமும் இல்லை. மிகவும் பொறுமையோடு நிவாரணம் கொடுக்கவந்தவர்களை அவர்கள் அணுகியது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அங்குள்ளவர்களே ஊர்மக்களை வரிசையில் நிற்கவைத்தனர். வரிசையில் நின்றவர்களிடம் எளிதாக நிவாரணப் பொருட்களை வழங்க முடிந்தது. பள்ளிக்கரணையில் இன்னும் மின்சார வசதி சீரடையவில்லை.
தனிப்பட்ட முறையில் நான் ஒரு பள்ளி ஆசிரியர் என்று சொல்லிக் கொள்வதில்லை. நாங்கள் 'தி இந்து' பிரஸ்ஸிலிருந்து வருவதாகத்தான் சொல்வோம். இதில் ஒரு முக்கியமான விஷயம் இந்த அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ளமுடிந்தது. மனசார நாம் பொருட்களை மக்களிடம் நேரடியாகக்கொடுக்கும்போது மக்கள் திருப்தியாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.
அடுத்தவர்களுக்கு செய்கிற உதவி எத்தகையதாக இருந்தாலும் அது அவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும்போது அது பேருதவியாக இருப்பதையும் கொடுப்பவர்களை வாயார வாழ்த்துவதையும் கண்ணால் காணமுடிந்தது. இதனால் சில நேரங்களில் இரவில் நேரங்கழித்து வீடுதிரும்புவதில்கூட நமக்கு சிரமங்கள் தெரிவதில்லை. அடுத்ததாக கடலூர் செல்கிறோம்" என தனது அனுபவத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.