“வனஜா..! இன்னைக்கு சாயங்காலம் கடைக்குப் போகணும். துணைக்கு வர்றியா?” என்று கேட்டவாறே உள்ளே வந்தாள் நிர்மலா.
அவள் கையில் இருந்த லேட்டஸ்ட் மாடல் ஆன்ட்ராய்ட் போனை ஆச்சரியமாகப் பார்த்த படி, “போன் புதுசா வாங்கினியா, சொல்லவே யில்லை..” என்று கேட்டாள் வனஜா.
நிர்மலா பெருமையாக “நியு ஜெர்சியில் இருக்கானே என் பையன் விவேக், அவன் தான் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கான்” என்றாள்.
கடையில் பத்தாயிரம் ரூபாய்க்கு அவள் எடுத்த பட்டு சேலையை பிரமிப்புடன் பார்த் தாள். அடுத்து வந்த நாட்களில் வாட்ச், தங்க நகை என்று கூரியரில் வர, ‘ஆன்லைனில் விவேக்..’ என்ற நிர்மலாவின் பெருமையை பொறாமையாகப் பார்த்தாள்.
நிர்மலா பக்கத்து வீட்டில் இருக்கிறாள். அவளுக்கும் ஒரே பையன் தான். வனஜாவின் பையன் பட்டப்படிப்பு முடித்ததும் ஒரு தனியார் கம்பெனியில் கணக்காளராக இருக்கிறான். அவன் மனைவியும் ஒரு நர்சரி ஸ்கூலில் டீச்ச ராக இருக்கிறாள். இருவர் சம்பளத்துடன் தன் கணவரின் பென்ஷன் பணமும் சேர்ந்து தான் ஓரளவு கடன் இல்லாமல் பேரனையும், பேத்தியையும் படிக்க வைத்து, குடும்பத்தை நடத்த உதவுகிறது.
ஆனால், நிர்மலாவின் மகனோ இன்ஜி னீயரிங் முடித்து அமெரிக்கா சென்று, அம்மா, அப்பாவுக்கு பணத்தால் அபிஷேகம் செய்கிறான். கணவரிடம் தன் ஆதங்கத்தை சொல்லிப் புலம்பினாள் வனஜா.
அவள் கணவர் பொறுமையாகப் பேசி னார். “வனஜா..! இதையே நீ வேறு கோணத் தில் பாரு.. நாம ஓஹோன்னு சொல்லிக்கிற அளவு இல்லைன்னாலும், மகன், மருமகள், பேரன், பேத்தியோடு சந்தோஷமா இருக் கோம். நம்ம தேவைக்கு என்னோட பென்ஷன் பணமும் வருது. நம்ம பையனுக்கு உதவி பண்ற திருப்தியும் இருக்கு. ஆனால் நிர்மலா குடும்பத்தை நினைச்சுப் பாரு..
பேரன், பேத்தி யைக் கொஞ்சி சந்தோஷப்படுற கொடுப் பினை அவங்களுக்கு இல்லை. அதுவும் தவிர அவங்க மகன் அனுப்புற காசை நம்பித்தான் அவங்க வாழ்க்கை ஓடுது.. இப்போ சொல்லு.. அவங்களை விட நமக்குத் தானே கடவுள் அருள் அதிகமா இருக்கு?” என்று அவர் சொன்னதிலிருந்த உண்மை புரிந்து வனஜாவின் முகம் மலர்ந்தது .