உசிலம்பட்டி அருகே தினமும் வீட்டு நாய் ஒன்று பசுமாடுகளை மேய்ச்சலுக்கு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமம் அன்னம்பார்பட்டி. இங்கு உள்ள ரயில்வேபீடர் தெருவில் வசித்து வருபவர் பால்ராஜ்(45). விவசாயியான இவர் தனது வீட்டில் 3 பசுமாடுகளும், 4 ஆட்டுகுட்டிகளும், வளர்த்து வருகிறார். அதனுடன் சேர்த்து வீட்டுகாவலுக்காக இரண்டு நாய்களையும் வளர்த்து வருகிறார் .இதற்கு வேட்டை ராஜா, ராக்கி எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் பால்ராஜ் தனது 3 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக சுமார் 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது தோட்டத்திற்கு தினமும் காலையில் அழைத்துச் செல்வார். அப்போது அவருடன் வேட்டை ராஜா பெயர் கொண்ட நாயும் உடன் செல்லும். தன்னுடைய எஜமானர் பசுமாட்டை கயிறுகட்டி அழைத்துச் செல்வதை கவனித்த நாய் ஒரு கட்டத்தில் பசுமாட்டை தானேபிடித்துச் செல்ல முயற்சி செய்த நிலையில் அந்த முயற்சி வெற்றி அடைந்தது.
தினமும் காலையில் 2 பசுமாட்டை பால்ராஜ் பிடித்து செல்ல அவருடன் மற்றொரு பசுமாட்டை பால்ராஜ் உடன் செல்லும் நாயும் மாட்டின் கயிற்றை தனது வாயால் கவ்வியபடியே தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. காலைமுதல் மாலை வரை மேய்ச்சல் முடிந்த பிறகு பசுமாடுகளை மாலையில் பால்கறப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் போதும் அதே நடைமுறையில் 2 பசுக்களை பால்ராஜ் அழைத்துவர, மற்றொரு பசுவை நாய் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருகிறது.
ஒருகட்டத்தில் வத்தலக்குண்டு - உசிலம்பட்டி சாலையில் வாகனங்கள் வந்தாலும் நாய் பசுமாட்டை வாகன நெரிசலில் சிக்காமல் நைசாக சாலையை கடந்து பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருகிறது.
இது போல்கடந்த 2 வருடங்களாக பசுமாட்டை நாய் அழைத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த நாய் காவல் தெய்வமாக காவல் காப்பதாக தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் இந்தநாய் இருப்பதால் அந்த பகுதி மக்கள் பயமில்லாமல் வெளியூர்களுக்கு செல்வதாகவும், இரவுநேரங்களில் திருடர்கள் வருவது குறைந்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நாயின்செயல் உசிலம்பட்டி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.