இத்தாலி மருத்துவர், குற்றவியல் துறை நிபுணர்
இத்தாலியை சேர்ந்த மருத்துவரும், குற்றவியல் துறையின் தந்தை என போற்றப்படுபவருமான செஸாரே லாம்ப்ரோசோ (Cesare Lombroso) பிறந்த தினம் இன்று (நவம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இத்தாலியின் வெரோனா நகரில் செல்வச் செழிப்பு மிக்க யூதக் குடும்பத்தில் (1835) பிறந்தார். பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம், இலக்கியம், மொழிகள், தொல்லியல் ஆகியவற்றைக் கற்றார்.
# ராணுவத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக சிறிது காலம் பணிபுரிந்தார். 1866-ல் பாவியா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரது சிந்தனை முழுவதும் உளவியல், மனநல மருத்துவத்திலேயே மையம் கொண்டிருந்தன. மனித உடற்கூறியல், மூளை சம்பந்தமான மருத்துவத்தில் கவனம் செலுத்தினார்.
# பெசாரோ நகரில் உள்ள மனநலக் காப்பகத்தின் இயக்குநராக 1871-ல் பொறுப்பேற்றார். டுரின் பல்கலைக்கழகத்தில் தடயவியல், சுகாதாரத் துறைப் பேராசிரியராக 1878-ல் நியமிக்கப்பட்டார். பொதுவான மனித நடத்தையியல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தைகள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
# டுரின் பல்கலைக்கழகத்தில் உளவியல், குற்றம் சார்ந்த மானுடவியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். அப்போது, உலகப் புகழ்பெற்ற தனது ‘லுமோ டெலிங்க்வன்ட்’ என்ற புத்தகத்தை எழுதினார். இது இத்தாலியில் தொடர்ந்து 5 பதிப்புகள் வெளியாகின. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
# பரம்பரை அடிப்படையில் குணாதிசயங்களை விவரிக்கும் ‘தி மேன் ஆஃப் ஜீனியஸ்’ என்ற நூலை 1889-ல் வெளியிட்டார். இப்புத்தகம் இதுதொடர்பான பல ஆய்வுகளுக்கும் பல புத்தகங்கள் வெளிவரவும் அடித்தளமாக அமைந்தது.
# இவர் மேற்கொண்ட ஆய்வுகளும், அதுதொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளும் இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தன. குற்றவியல் துறையின் மூத்த நிபுணராக மதிக்கப்பட்டார். இவரது கருத்துகள் ‘பாசிடிவ் கிரிமினாலஜி’ என குறிப்பிடப்பட்டன.
# ‘குற்றவாளிகள் பிறக்கிறார்கள். அவர்களை யாரும் குற்றவாளிகளாக உருவாக்குவதில்லை’ என்று முதலில் குறிப்பிட்டார். மனிதனின் குற்ற நடத்தைக்கான காரணங்களை அறிய பல ஆய்வுகளை மேற்கொண்டார். ‘வாழ்க்கை சூழல், சந்தர்ப்பங்கள், வறுமை போன்ற காரணங்களாலேயே குற்றவாளிகள் உருவாகின்றனர். பிறவிக் குற்றவாளிகளுக்கும், இவர்களுக்கும் உடல் அமைப்பு, சிந்தனை ஆகியவற்றில் நிறைய வேறுபாடுகள் உள்ளன’ என்பதைக் கண்டறிந்து கூறினார்.
# திருடுபவர்கள், பாலியல் குற்றவாளிகள், கொலையாளிகள் போன்றவர்களால், மற்றவர்கள் அளவுக்கு வலியின் வேதனையை உணர முடியாது. பார்வைத் திறன், தொடு உணர்ச்சி ஆகியவை இவர்களுக்கு மந்தமாக இருக்கும். உடல், மனரீதியில் இவர்களிடம் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன என்றும் கூறினார்.
# இத்தாலியன் ஸ்கூல் ஆஃப் பாசிட்டிவ் கிரிமினாலஜி என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். குற்றவியல், மானுடவியல், குற்றவாளிகளிடம் மரபியல் தாக்கம் போன்றவை தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதினார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.
# ஒருகட்டத்தில் அமானுஷ்யம், ஆன்மிகத்தில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டு, அதுதொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டார். இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பல கட்டுரைகளையும் ‘ஆஃப்டர் டெத் வாட்?’ என்ற நூலையும் எழுதினார். குற்றவியல் ஆராய்ச்சிகளாலும் அதுதொடர்பான கோட்பாடுகளை வகுத்ததாலும் உலகப் புகழ்பெற்ற செஸாரே லாம்ப்ரோசோ 74-வது வயதில் (1909) மறைந்தார்.