செர்பியாவில் வளர்க்கப்படும் நாய்க்கு ‘வாட்ஸ் அப்’ வீடியோ கால் மூலம் மதுரை அரசு கால்நடை மருத்துவர் ஒருவர், கால் வளைவு பாதிப்பு சிகிச்சைக்கான ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
மதுரை கூடல்நகரைச் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ். இவர் அரசு கால்நடை மருத்துவமனை பணிக்குப் பிறகு, வசதியில்லாத ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வீடு தேடிச் சென்று இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
தற்போது இவர் தஞ்சாவூர் ஓரத்தாநாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்லைக்கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு படிக்கிறார். விடுமுறை நாட்களில் மதுரை வரும்போது தற்போதும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இலவசமாக சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இவர் ஜல்லிக்கட்டுக்காளைகளுக்கும், வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களுக்கும் ஏற்படும் நோய்கள், பாதிப்புகளை பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் சமூக வளைதளங்கில் வீடியோ பகிர்ந்து வருகிறார்.
அப்படி அவர் சமீபத்தில் நாய்களில் சமீப காலமாக ஏற்படும் கால் வளைவு பாதிப்பு பற்றிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவைப் பார்த்த ஐரோப்பா கண்டத்தில் உள்ள செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோவன் என்பவர், மெரில்ராஜை தொடர்பு கொண்டு தான் வளர்க்கும் காக்கேசியன் செப்பர்டு நாய்க்கு ஏற்பட்டுள்ள கால்வளைவு நோய்க்கு ஆலோசனை கேட்டார்.
அதற்கான சிகிச்சையையும், ஆலோசனையையும் மெரில்ராஜ் ‘வாட்ஸ் அப்’ கால் மூலம் வழங்கியுள்ளார். மதுரை மருத்துவரின் கால்நடை சிகிச்சை பல ஆயிரம் கி.மீ., கடல் கடந்து ஐரோப்பா நாடுகள் வரை சென்றுள்ளதோடு அந்த நாட்டைச் சேர்ந்தவரும் ஆலோசனை கேட்டுள்ளது மெரில்ராஜூக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற நாட்டு நாய்களில் ஏற்படும் கால்வளைவுப் பிரச்சனைப் பற்றி நான் பகிர்ந்த வீடியோவைப்பார்த்துதான் அவர் தொடர்பு கொண்டார்.
அவர் வீட்டில் வளர்க்கிற வெளிநாட்டு ரக நாய்க்கு பின்னங்கால் இரண்டும் எக்ஸ் மாதிரி வளைந்துள்ளது. அதற்கு ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கினேன். அவர் மிகுந்த திருப்தியும், நன்றியும் தெரிவித்தார்.
பொதுவாக கால்சியம், பாஸ்பரஸ் சத்து குறைபாட்டால் இந்த குறைபாடு நாய்களுக்கு அதிகளவு வர வாய்ப்புள்ளது. தற்போது நாய்களை சாதாரண தரைகளில் வளர்க்காமல் கிராணைட், மொசைக், மார்பிள் போன்ற தரைகளில் விட்டு வளர்க்கிறோம்.
இந்த தரைகள் எளிதில் வழுக்கும் தன்மை கொண்டவை. அந்த நாய்கள் அந்த தரைகளில் வளர்வதால் அவை நடக்க முடியாமல் மணிக்கட்டு பாதித்து முன்னம் மற்றும் பின்னங்கால்கள் வலுவலிழுந்து வளைந்து விடுகின்றன. மேலும், போதுமான இடவசதியில்லாமல் வீட்டிற்குள் கட்டிப்போட்டு வளர்ப்பதாலும் இந்த பிரச்சனை வருகிறது. நாய்களை வெளியே வாக்கிங் அழைத்துச் செல்லாமல் கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் மணிகட்டில் பாதிப்பு ஏற்பட்டு கால் வளைய ஆரம்பித்துவிடுகிறது.
மனிதர்கள் எப்படி உடல் எடையை பராமரிக்கிறோமோ அதுபோல் நாய்கள் உடல் எடையையும் பாராமரிப்பது முக்கியமானது. முன்பு மாமிசம், நாம் சாப்பிடும் உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த நாய்கள் இன்று பீட்சா, பர்க்கர் போன்ற உணவுகளையும் சாப்பிட்டு வளர்க்கின்றன.
இந்த மாதிரியான உணவு பழக்கவழக்கமும், வளர்ப்பு முறையும் நாய்களுக்கு சத்து குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். தாய், தந்தை நாய்களுக்கு கால் வளைவு இருந்தாலும் மரபு வழியாகவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
உணவுப்பழக்கவழக்கம், வளர்ப்பு முறை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளால் தற்போது வெளிநாட்டு நாய்களுக்கும், தமிழ்நாட்டு நாய் இனங்களுக்கும் இந்த கால் வளைவு பாதிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது.
நானே கடந்த 2 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இந்தப் பிரச்சனைக்காக சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கியுள்ளேன், ’’ என்றார்.