வலைஞர் பக்கம்

ஹுமாயூன் அஹமத் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

வங்காள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்

வங்காள எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முகத் திறன் வாய்ந்த ஹுமாயூன் அஹமத் (Humayun Ahmed) பிறந்த தினம் இன்று (நவம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# வங்கதேசத்தின் நெட்ரோகானா மாவட்டம் குதுப்பூரில் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) 1948-ல் பிறந்தார். தந்தை போலீஸ் அதிகாரி. அவரது பணி மாற்றல் காரணமாக பல இடங்களுக்கும் குடும்பம் இடம் பெயர்ந்தது. இவரது இயற்பெயர் சம்சுர் ரஹ்மான். வீட்டில் செல்லமாக ‘கஜோல்’ என்று அழைக்கப்பட்டார்.

# அறிவுக்கூர்மை மிக்க இவர், தாக்கா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. முடித்தார். அங்கேயே வேதியியல் துறையில் விரிவுரையாளராக சேர்ந்தார். அமெரிக்காவின் வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தில் பாலிமர் ரசாயனத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

# வங்கதேச விவசாயக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 6 மாதம் கழித்து தாக்கா பல்கலைக்கழக வேதியியல் துறையில் பேராசிரியராக சேர்ந்தார். குவான்டம் வேதியியல் குறித்து முதலில் வங்க மொழியில் ஒரு நூல் எழுதினார். இதற்காக ஓராண்டு காலம் விடுப்பு எடுத்துக்கொண்டார்.

# எழுத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக, பேராசிரியர் பணியை 1990-களில் துறந்தார். தன் பெயரை ‘ஹுமாயூன் அஹமத்’ என மாற்றிக்கொண்டார். லைலாபோட்டி, சவுரவ், பேரா, கிருஷ்ணோ பக்கோ, ஒமானுஷ், ஆஷாபோரி, ஷுவ்ரோ, ருபாலி த்வீப் உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதியுள்ளார்.

# வங்க விடுதலைப் போர் குறித்து பல நூல்களைப் படைத்துள்ளார். இவற்றில் 1971, ஷ்யாமல் சாயா, அனில் பக்சிர் எட்கின் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பல அறிவியல் புனைகதைகளையும் படைத்துள்ளார்.

# அமானுஷ்ய விஷயங்கள் குறித்தும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். தனித்துவம் வாய்ந்த இவரது பாணி, வாசகர்கள் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடும் அளவுக்கு விறுவிறுப்பானது.

# இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘ஆகுனிர் பரஷ்மோனி’. இது வங்க விடுதலைப் போரை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த இயக்கம், சிறந்த திரைப்படம் என்பது உட்பட 8 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்ற திரைப்படம் இது. ஷ்ரபோன் மெகர் தின், துயி துவாரி, அமர் ஆச்சே ஜோல், பிரியதோமேஷு உட்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

# திரைக்கதை மற்றும் பாடல்களும் எழுதியுள்ளார். பிரபல நாடக ஆசிரியராகவும் முத்திரை பதித்தார். ஏராளமான தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும், இயக்கியும் உள்ளார். 1981-ல் பங்களா அகாடமி விருதும், எகுஷே பதக் மற்றும் லேகக் ஷிபிர் பரிசு, சைஷு அகாடமி விருது, மைக்கேல் மதுசூதன் பதக்கம், ஹுமாயூன் காதிர் நினைவுப் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

# இவரது தம்பி முகமது ஜாபர் இக்பால், பல்கலைக்கழகப் பேராசிரியர், பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இன்னொரு தம்பி அஹ்சன் ஹபீப், பிரபல கார்ட்டூனிஸ்ட்டாக உள்ளார்.

# ஹுமாயூன் அஹமத் வங்க இலக்கியத்தை செழிப்படைய வைத்ததில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர். வங்கதேச எழுத்துலக ஜாம்பவான் என போற்றப்பட்ட இவர் 64-வது வயதில் (2012) மறைந்தார்.

SCROLL FOR NEXT