வலைஞர் பக்கம்

முத்துக் குளிக்க வாரீகளா 17: கவிதைக்கு மதம் கிடையாது!

கவிக்கோ அப்துல் ரகுமான்

மும்பை சியோன் மாதர் சங்கக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

‘‘இந்தக் கூட்டம் எதற்காகக் கூட்டப் பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நம் சங்கத்திற்காக ஒரு சொந்தக் கட்டிடம் தேவைப்படுகிறது. அதுவும் விரைவாக. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்கிறேன்’’ என்றார் சங்கத் தலைவி.

ஆளாளுக்கு ஒரு யோசனை கூறினார்கள். தலைவிக்கு எதிலும் திருப்தி இல்லை.

இறுதியாக ஒரு பெண்மணி எழுந்தார். ‘‘பைஸ் அஹ்மத் பைஸை வரவழைத்தால் நிதி திரட்டுவது மிக எளிதாகிவிடும்’’ என்றார்.

‘‘அதெப்படி சாத்தியம்? அவர் பாகிஸ்தான் கவிஞர். அவரை எப்படி இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும்? அதுவும் இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவுகிறது.’’

‘‘பைஸ் இருப்பதுதான் பாகிஸ்தான். அவருடைய கவிதைகளுக்கு இந்தியாவில்தான் ரசிகர்கள் அதிகம்.’’

‘‘உண்மைதான். குயிலின் பாட்டு அது தங்கியிருக்கும் தோட்டத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. அதை எல்லோரும் ரசிக்கலாம்!’’

‘‘ஆம்! கவிஞர்கள், கலைஞர்கள் பொதுவானவர்கள். மனிதர்கள் கிழித்த நாட்டு எல்லைக் கோடுகள் அவர்களைத் தடுப்பதில்லை. ஏனெனில் அவர்கள் பறவைகள்.’’

‘‘உண்மைதான். வேறோரு நாட்டிலிருந்து வருகிறது என்பதற்காக நதியை நாம் தடுக்கிறோமா? காற்று, ஒளி போன்று கவிஞர்களும் கலைஞர்களும் எல்லோருக்கும் சொந்தம்.

‘‘சரிதான், பைஸ் பாகிஸ்தானில் வசிப்பவராக இருக்கலாம். ஆனால், அவர் கவிதை இந்தியாவுக்கும் சொந்தம். அவர் மதத்தால் முஸ்லிமாக இருக்கலாம். ஆனால் அவர் கவிதைக்கு மதம் கிடையாது.’’

‘‘ஆம். கவிஞர்களும் கலைஞர்களும் மனிதனின் மூல அடையாளத்தைத் தொடுபவர்கள். அதன் மூலம் மனித சமுதாயத்தை ஒன்றிணைப்பவர்கள். அவர்களை நம்முடைய அரசியல், மதம் என்ற குறுகிய கூடுகளுக்குள் அடைப்பது மடத்தனம்.

இறுதியில் பைஸை அழைப்பது என்று ஏக மனதோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த பிரச்சினை, அவரை எப்படி அழைப்பது?

‘‘இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைத் தவிர வேறு யாராலும் பைஸைக் கொண்டு வர முடியாது. எனவே அவரிடமே போவோம்.’’

மாதர் சங்கக் குழு ஒன்று இந்திரா காந்தியைச் சந்தித்துத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.

அவர் கொஞ்சம் கூடத் தயங்கவில்லை. உடனே பாகிஸ்தான் பிரதமர் அய்யூப்கானிடம் தொலைபேசியில் பேசினார்.

‘‘எங்கள் மக்கள் பைஸைக் கேட்க விரும்புகிறார்கள். அவரை அனுப்பி வையுங்கள்’’ என்று கூறித் தொலைபேசியை வைத்துவிட்டார்.

அய்யூப்கான் ஒருகணம் திடுக்கிட்டார். உடனே அதிகாரிகளை அழைத்து, ‘‘பைஸ் எங்கிருந்தாலும் அவரை அழைத்து வந்து டெல்லிக்கு அனுப்பி வையுங்கள். ராணுவ விமான தளத்தில் என் தனி விமானம் நிற்கிறது. அதில் அனுப்பி வையுங்கள்’’ என்றார்.

அதிகாரிகள் ‘வீஸா’ என்றார்கள்.

‘‘அவர் கவிஞரய்யா! அவருக்கு எதற்கு ‘வீஸா’? நம்மை வெறுப்பவர்கள் நம் கவிஞனையாவது விரும்புகிறார்களே! அது பெரிய விஷயம். பைஸை அனுப்பி வையுங்கள்.’’

பைஸ் இந்தியா வந்து சேர்ந்தார். பல இடங்களில் அவருடைய கவிதை வாசிப்பு. ஏராளமான கூட்டம். மக்கள் வெறிபிடித்துப் போய் ரசித்தார்கள்.

வேண்டிய நிதி திரண்டுவிட்டது.

இந்த அற்புதமான நிகழ்வின் நிரூபணமாக இன்றும் நின்றுகொண்டிருக்கிறது, மும்பை சியோன் மாதர் சங்கக் கட்டிடம்.

நஸ்ருல் இஸ்லாம் என்ற கவிஞர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு நூற்றாண்டு விழா. வங்காள தேச மக்கள் அதை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

இந்தியப் பகுதியில் இருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள், ‘நஸ்ருல் இஸ்லாம் வங்காள தேசத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். முஸ்லிமாக இருக்கலாம். அவர் வங்காள மொழிக் கவிஞர். அந்த வகையில் அவர் எங்களுக்கும் கவிஞர்’ என்று கூறி அவர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்.

அதைப் போலவே ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழாவை மேற்கு வங்காளத்தவர் மிகச் சிறப்பாகக் கொண்டாடியபோது, வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களும் அவ்விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

இதுதான் இந்தியக் கலாச்சாரம்.

பாடகர் பாகிஸ்தானி என்பதற்காக அவர் நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்தவிடாமல் எதிர்ப்பதல்ல.

கவிஞர்களும், கலைஞர்களும் எதிர்முகச் சிந்தனைகளான வெறுப்பு, பகைமை ஆகியவற்றை நீக்கி அன்பையும் மனித நேயத்தையும் பரப்புபவர்கள். எனவே அவர்களை அரசியல், மதப் பார்வையால் எதிர்ப்பவர்கள், அன்பையும், மனித நேயத்தையும் மறுப்பவர்கள் ஆவர்.

இசையை ரசிக்காதவன் ஆபத்தானவன் என்று ஷேக்ஸ்பியர் கூறுகிறார்.

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் பாதுகாப்புக்காக நிலவறையில் தங்கியிருந்தார்கள்.

மேலே ஜெர்மானியர்கள் குண்டுமாரி பொழிந்துகொண்டிருந்தனர்.

கீழே அந்த ஆபத்தான நிலையிலும் ஆங்கிலேயர்கள் ஒரு கவிஞனின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

எந்தக் கவிஞனைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்?

மேலே எந்த நாட்டுக்காரன் குண்டுமாரி பொழிந்துகொண்டிருந்தானோ, அந்த ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த கெதே என்ற கவிஞனைத்தான் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இதுதான் கவிதையின் வெற்றி.

ஜெர்மானியப் படைகள் செய்ய முடியாததை ஒரு ஜெர்மானியக் கவிஞன் சாதித்துவிட்டான்.

இடத்தைப் பிடிப்பது அற்ப வெற்றி. இதயத்தைப் பிடிப்பதுதான் பெரிய வெற்றி.

தங்கள் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்த ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்தவராயிற்றே கெதே, அவரைக் கொண்டாடுவதா என்று ஆங்கிலேயர்கள் நினைக்கவில்லை.

அவர் உலகக் கவிஞர்; அவரைக் கொண்டாடுவது நம் கடமை என்று அவர்கள் நினைத்தனர்.

அதுதான் ஆங்கிலேயர்களுடைய பண்பாடு.

ஒரு மனிதனின் பண்பாடு!

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

SCROLL FOR NEXT