நவம்பர் 17 : முடவன் முழுக்கு
இந்தியாவைப் பொறுத்தவரை ஆறுகளில் நீராடினால் புனிதம் ஏற்பட்டு, பாபம் தொலையும் என்பது ஐதீகம். இதில் கங்கை நீராட்டம் பழம் பெருமை வாய்ந்தது. தென்னாட்டுக் காவிரியில் நீராடினால் அதனினும் புனிதம் என்பார்கள். அதிலும் துலா ஸ்நானம் பாபத் துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஏனெனில் கங்கை, யமுனை ஆகிய புண்ணிய நதிகள் இங்கு வந்து புனிதம் ஏற்றுச் செல்லும் மாதம் ஐப்பசி. அதனால் அப்புனித நதிகளின் பங்கும், இக்காவிரியில் கலந்துவிடுவதால், இந்த காவிரி நீராட்டம் பல மடங்கு நன்மையை ஐப்பசி மாதத்தில் அளிக்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் இந்நதியில் நீராடுபவரும் உண்டு. இத்தமிழ் மாதக் கடைசியில் ஒரு நாளேனும் நீராடலாம் என வருபவர்களும் உண்டு. கடைசி நாளானதால் இதற்கு கடை முழுக்கு என்று பெயர்.
முடவன் முழுக்கு
இப்பிறவியில் பாபத்தால்தான் முடவன் ஆனதாக வருந்திய ஒருவர். இனி எப்பிறவியிலும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்ற பிரார்த்தனையை முன் வைத்து, தொலைதூரத்தில் இருந்து தவழ்ந்து காவிரியில் நீராடக் கிளம்பினான். தவழ்ந்து வந்ததால், ஐப்பசி முடிவுற்று, கார்த்திகை பிறந்துவிட்டது. அவன் மனம் நொந்தது. தனக்கு மறுபிறவியிலும் இந்நிலைதானா? என்று மனம் புழுங்கினான்.
அவன் புனித நதியான காவிரியையே எண்ணி வந்த புண்ணியம் காரணமாக, ஓர் அசரீரி ஒலித்தது. இன்றைய ஸ்நானமும் முடவன் முழுக்கு என்ற பெயர் பெற்று, நீராடிய புண்ணிய பலன் முழுமையாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. கடை முழுக்கையும் தவறவிட்டவர்கள், முடவன் முழுக்கைப் பெற்று பயனுறலாம் என்பதே அது.
புனித நீராடும் முறை
புண்ணிய நீர்நிலைகளில் புனித நீராடுவதற்கு சாஸ்திரங்கள் சில வழிமுறைகளை விளக்குகிறது. நீரில் கால் வைக்கும் முன், குனிந்து இரு கைகளாலும் நீரை ஒதுக்கி தூய்மை செய்ய வேண்டும். பின்னர் ஒரு கை நீர் கொண்டு தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். கண்கள் இரண்டையும் துடைத்துக் கொள்ள வேண்டும். இரு கைகளிலும் கிண்ணம் போல் ஏந்தி நீர் மொண்டு, இறைவனை பிரார்த்தித்தபடி உட்கொள்ள வேண்டும்.
இனிமேல் நீரில் முழுமையாக இறங்கலாம். சோப், ஷாம்பு போன்ற ரசாயன கலப்புப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. வாசனை பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை பயன்படுத்தினாலே கேசம் பூப்போல் ஆகும். ஆற்றில் குடைந்து நீராடி, மூன்று முழுக்குப் போட வேண்டும்.
ஈரத்தோடு இடுப்பளவு நீரில் நின்று, இரு உள்ளங்கைகளையும் இணைத்து கிண்ணம் போலாக்கி நீர் மொள்ள வேண்டும். சூரியன் இருக்கும் திசை நோக்கி திரும்பி, இரு கண் மூடி, இறைவனை பிரார்த்தித்து, இரு கைகளில் உள்ள நீரை, அவற்றில் இடைவெளி வழியாக, இறைவனுக்கு அர்க்கியமாய் எண்ணி ஆற்றிலேயே விட்டுவிட வேண்டும். இது போல மூன்று முறை செய்ய வேண்டும்.
அங்கப்பிரதட்சணம் செய்வதென்றால் ஈர உடையோடு செய்யலாம். மற்றபடி, ஈரம் போக உடலைத் துடைத்து, உலர்ந்த ஆடை உடுத்தி, நெற்றிக்கு இட்டுக் கொண்ட பின்னரே கோயிலில் உள்ள இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இதனால் குறைவில்லா புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.