வலைஞர் பக்கம்

வானிலை மாற்றங்கள்: உஷார்படுத்திய வலைப் பதிவர்கள்

கே.லட்சுமி

வட கிழக்குப் பருவ மழையால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்த, அரசின் தகவலுக்காக ஒட்டுமொத்த நகரமும் பரபரப்பாய்க் காத்திருக்க, தனிப்பட்ட வலைப்பதிவாளர்கள், வானிலை குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.

வலைப்பதிவர்களால் வானிலை அறிக்கைகள், கடந்த வாரம் முழுவதுமே பகிரப்பட்டு வந்தன. பதிவர்கள் தங்கள் இருப்பிடத்தின் நிலை பற்றிய செயற்கைக்கோளின் படங்களையும், தகவல்களையும் தேடி, மக்களுக்கு அளித்த வண்ணம் இருந்தனர். அத்தோடு தங்களின் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து, வட கிழக்குப் பருவ மழையின் தாக்கத்தையும், வானிலையையும் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.

இது குறித்துப் பேசிய கீவெதர் என்னும் வானிலை வலைத்தள பதிவர்களில் ஒருவரான பிரதீப் ஜான், "வானிலை மற்றும் மழை குறித்த என்னுடைய ஃபேஸ்புக் பதிவொன்று, ஒரே நாளில் ஒரு லட்சம் மக்களைச் சென்றடைந்தது. வங்காள விரிகுடாவின் வானிலை மாற்ற முறையை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்ததால், ஒரு சில நாட்களில் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்க முடிந்தது என்றார்".

சென்னையில் ஒரு மழைக்காலம் என்னும் வானிலை வலைத்தள பதிவரான ஸ்ரீகாந்த், "இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்துடன் நாங்கள் போட்டி போடவில்லை. மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியைக் குறைத்து, சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்ந்து, அவர்களின் வேலையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முயல்கிறோம். என்னைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, சரியான தகவலை உரிய நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT