“நான் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு மக்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டேன்” – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் இந்தப் பேச்சு பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
கலைஞரை, அவரது முதுமையை கமல் கேலி செய்துவிட்டார் என்று இணையதளங்களில் உடன்பிறப்புகள் பொங்கி வருகிறார்கள். ‘கலைஞானி’ எனத் தனக்குப் பட்டம் சூட்டி அழகு பார்த்த கலைஞரைக் கமல் இப்படிக் கேலி செய்வார் என்று உடன்பிறப்புகளில் பலர் எண்ணுவது சரியா?
முதுபெரும் தலைவரும், தலைசிறந்த திராவிட சித்தாந்தப் பிதாமகர்களில் ஒருவரும், மாபெரும் தமிழ் அறிஞரும், முன்னாள் முதல்வரும் ஆன கலைஞர் மு.கருணாநிதியை, கமல் கேலி செய்தார் எனும் புரிதல், சக திறமையாளர்களை, தலைவர்களை மதிப்பதில் முன்மாதிரியாக இருந்து வந்திருக்கும் கமல் எனும் உயரிய மக்கள் கலைஞரை அரசியல் போட்டியாளராகப் பார்ப்பதால் விளையும் கோளாறு என்பதே சரி.
ஒருவர் மீது குற்றம் சாட்டும்போது அவர் எத்தகையவர், அவர் அவ்வாறு பேசக் கூடியவரா என்று பார்க்க வேண்டாம். இதுவரை கமல், எந்தத் தலைவரைக் குறித்தும் கேலியோ, கிண்டலோ அல்லது அவதூறோ செய்தது கிடையாது. கமல் மீது குற்றம் சாட்டும் எவராலும் அதுபோன்ற ஒரு திடமான சான்றைத் தர முடியாது.
கமலின் சுபாவம் என்பது அவரது மன ஓட்டம்தான். அவரது மன ஓட்டம் என்பது அவரது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறது. அவரது எண்ணங்கள் என்பது அவரது சிந்தனையின் வெளிப்பாடு. அவர் எப்படிச் சிந்திக்கிறாரோ அப்படியே பேசுகிறார். தான் பார்ப்பவற்றை, உணர்வனவற்றை, தனது புரிந்துகொள்ளும் பாங்கின் வகையிலேயே தனக்குள் சேமித்து வைத்துக்கொள்கிறார். அவற்றைச் சுற்றி தனது சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்தக் கருத்துக்களை தனது சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தவும் செய்கிறார். இது கமலின் பாணி! அதேநேரம் ‘பப்ளிக் ஒப்பீனியன்’ எனும் பொதுக்கருத்தை மதிப்பதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
அவரது சொந்த வார்த்தைகள் என்று நான் எவற்றைக் குறிப்பிடுகிறேன்? காந்தியைக் குறிப்பிடும்போது நாம் பொதுவாக எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவோம்? மகாத்மா காந்தி என்போம்; தேசத் தந்தை என்போம். ஆனால் கமல் அவரை எந்த வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்?.
‘அந்த குஜராத்துக் கிழவன்’, என்பார்! ‘மோஹன்தாஸ் கரம்சந்த்’ என்பார்!
‘மிஸ்டர் எம்.கே. காந்தி’ என்பார்! ‘அந்த முரட்டுக் கிழவன்’ என்பார்!
ஒரு பெயரை அல்லது செய்தியை அல்லது கருத்தை ஏற்கெனவே இருக்கும் வழக்கமான பாணியில் அல்லாது தனக்கே உரிய வேறு ஒரு சுவாரசியமான தொனியில் சொல்வது கமலின் பாணி.
உதாரணமாக கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேச வரும்போது கமல் அதை எப்படி வழக்கத்துக்கு மாறாக நிறுவினார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று. அவர் சொன்னார், “கடவுள் இல்லன்னு சொல்லல; இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்” - இதுதான் கமலின் பாணி.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்களைத் தான் ஒருபோதும் புண்படுத்த விரும்பவில்லை என்பதுதான் அவரது உள்ளம். அவரது உள்ளம் அத்தகையது என்றால் அதிலிருந்து வரும் சொற்கள் மற்றவர்களைத் தனிப்பட்டமுறையில் தாக்கும் அம்பாக ஒருபோதும் இருந்ததில்லை; இனி இருக்கப் போவதுமில்லை.
அந்த வகையில் உள்ளத்திலிருந்து வரும் சொற்களைப் பயன்படுத்துவதில் கமலின் பாணி என்பது மதிப்புக் கூட்டப்பட்ட சொற்களால் ஆனது. தொடர் வாசிப்பும், எழுத்தாளர், கவிஞர் எனும் பன்முகமும் கொண்ட கமலுக்கு அது படைப்பின் மொழியாகவும் பல நேரங்களில் வெளிப்பட்டு நிற்கிறது.
அதாவது, தான் சொல்ல விரும்பும் ஒவ்வொரு கருத்தையும் வழக்கமான பாணியில் இருந்து விலகி தனக்கே உரிய சுவாரசியமான முறையில், வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக இருப்பதற்கு அவரது ‘ட்விட்டர் மொழி’ மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது. தன்னைச் சிறப்பித்த மக்களுக்கு தன்னைத் தர முன்வந்துவிட்ட கமல், அவர்களது மனங்களைத் தொட தனது இந்த படைப்பு மொழியை மேலும் எளிமைப்படுத்தி வருகிறார். என்றாலும் எதையும் நறுக்கென்று சொல்லிட வேண்டும் என்கிற அவரது இந்த பாணி சில சமயங்களில் உள்நோக்கத்துடன் புரிந்துகொள்ளப்படுவது எதிர்பாராத ஒன்று.
‘எனக்கு வயதான நிலையில் நானும் சிரமப்பட்டு, உங்களையும் சிரமத்துக்கு உள்ளாக்க மாட்டேன்’ என்பதுதான் அவர் சொல்ல வந்தது. இந்தக் கருத்தை தனக்கே உரிய செம்மையான பாணியில் அவர் சொல்ல நினைத்தார்; சொன்னார். அதுதான், “நான் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு...” என்று வந்தது. இங்கே சக்கர நாற்காலியில் என்ற சொற்களை தனது முதுமையைக் குறிக்கவே பயன்படுத்தினார் என்பது தெள்ளத் தெளிவு.
இப்போது இப்படிக் கேட்கலாம். ‘ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? நேரடியாகச் சொல்லி இருக்கலாமே. வயது முதிர்ந்த காலத்தில் அரசியல் செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்கலாமே என்று கேட்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், ஏன்? காந்தியை ‘மகாத்மா காந்தி’ என்று சொல்ல வேண்டியதுதானே? ஏன் அவரை ‘அந்த குஜராத்துக் கிழவன்’ என்று சொல்ல வேண்டும் என்று கேட்பதைப்போல இருக்கிறது!
ஏன்? ‘கடவுள் இல்லை’ என்று நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே? ஏன் ‘இருந்தா நல்லாருக்கும்’னு சொல்ல வெண்டும் என்று கேட்பதைப் போல இருக்கிறது!
கமலின் சுபாவம் அப்படி; அவருடைய மன ஓட்டம் அப்படி; அவரது எண்ணங்கள் அத்தகையவை; அவருடைய பயன்படுத்தும் வார்த்தைகள் அந்த வழிப்பட்டவை; அதனால் அவருடைய பேச்சு அப்படி அமைகிறது. இதைப் புரிந்துகொண்ட உடன்பிறப்புகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்.
அவர்கள் கமல் எனும் படைப்பாளியை, அவரது எழுத்தை, பேச்சை, பேசும் பாணியை நன்கு அறிந்தவர்கள். அதை அறியாத சில இள ரத்தங்கள் கொதிப்பதை ‘மய்ய’த்தில் நிற்கும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்களும் புரிந்துகொள்ள முயலுங்கள். அதுதான் திமுகவின் பெயரைக் கெடுக்காமல் இருக்கும்.
ம.தொல்காப்பியன், தொடர்புக்கு: Writer.tholkappiyan@gmail.com