ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் கொனார்க் அமைந்துள்ளது. இங்கு 12-ம் நூற்றாண்டில் நரசிம்ம தேவர் என்ற மன்னனால் கட்டப்பட்ட சூரிய கோயில் உள்ளது. இது பார்ப்பதற்குத் தேரைப் போலவே கலைநயம் மிக்க சக்கரங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இந்தியாவில் சூரியக் கடவுளுக்காகக் கட்டப்பட்டு எஞ்சியுள்ள கோயில் இது மட்டுமே.
சிற்ப வேலைப்பாடுகள்
இக்கோயில் சிவப்பு மணற்பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள பெரும்பாலான கற்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களைக் கொண்டுள்ளன. தேர் போன்ற கோயிலின் சக்கரம் முழுவதும் சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் சிற்பக் கலையைப் பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கடற்கரை பசுமைக் குடில்கள்
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில், அவர்களைக் கவரும் வகையிலும், கரோனா பொதுமுடக்கத்தால் துவண்டு கிடந்த ஒடிசா மாநிலச் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கவும், முதல்வரின் தனிச் செயலரும், 5டி (Transparency, Technology, Teamwork, Time, Transformation) தொலைநோக்குத் திட்டத்துறைச் செயலருமான வி.கார்த்திகேய பாண்டியன் ஈக்கோ ரிட்ரீட் (Eco Retreat) சூழலியல் சுற்றுலாத் திட்டத்தை முன்னெடுத்தார். இதன் சிறப்பு, நாம் எந்த சூழல் செறிந்த சுற்றுலாத் தலத்தைப் பார்வையிட விரும்புகிறோமோ, அங்கேயே மரப்பலகை, துணி ஆகியவற்றால் ஆன குடில்களை அமைத்து, சுற்றுலாப் பயணிகளை அதில் தங்க வைப்பதுதான். இந்த புதிய திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நட்சத்திர விடுதிக்கு இணையாக...
கொனார்க்கில் ஈக்கோ ரிட்ரீட் என்ற சூழலியல் சுற்றுலா மையம் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மரப் பலகைகள், துணிகள் ஆகியவற்றைக் கொண்டு பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த குடில்களில் கிடைக்கின்றன. ஏசி வசதியும் உண்டு. இந்த வளாகத்தில் பெட்ரோல், டீசலால் இயங்கும் கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் இருந்தே பாட்டரியால் இயங்கும் வாகனத்தில்தான் வந்து செல்ல வேண்டும்.
பொழுதுபோக்கு
இங்கு பொழுதுபோக்கும் விதமாக சைக்கிள்கள், கேரம் விளையாட்டு, கடற்கரையில் பாரா செய்லிங், இயந்திரப் படகு சவாரி, கடற்கரை மணலில் இயக்கும் மோட்டார் வாகனம், நீர் சறுக்கு விளையாட்டு வசதி போன்றவை உள்ளன. காலையில் யோகா பயிற்சி, ஸூம்பா நடன பயிற்சி வழங்கப்படுகிறது. மாலையில் திறந்தவெளித் திரையரங்கில், கொனார்க் பகுதியின் சிறப்புகள் திரையிடப்படுகின்றன. ஒடிசா மாநிலப் பாரம்பரியம் சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
திடக்கழிவு மேலாண்மை
அதே வளாகத்தில் உணவகமும் அமைந்துள்ளது. அவற்றில் 3 வேளையும் சைவ, அசைவ அறுசுவை உணவுகள் கிடைக்கின்றன. இந்த வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. குடிநீர் கூட கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடி குவளைகளில் வழங்கப்படுகிறது. அங்கு உற்பத்தியாகும் குப்பைகளில் 99 சதவீத மக்கும் குப்பை உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கி உரமாக்கப்படுகிறது. உடைந்த கண்ணாடி பாட்டில் போன்ற மக்காத குப்பைகள், மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
புதிய அனுபவம்
இங்குள்ள குடில்கள், கடற்கரையில் கடலலைகள் வந்து செல்லும் இடத்துக்கு மிக அருகில் உள்ளன. குடிலில் இருந்து சில அடிகள் எடுத்து வைத்தால், கடலலையில் கால்களை நனைத்து மகிழலாம். அதிகாலை சூரிய உதயத்தையும், அந்தி மாலை சூரியன் அஸ்தமனத்தையும், அவை கடல் நீரில் பிரதிபலிப்பதையும் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இது சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய அனுபவத்தை கொடுப்பதால் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகின்றனர்.
அனுபவமிக்க வழிகாட்டிகள்
ஈக்கோ ரிட்ரீட்டில் தங்கும் சுற்றுலாப் பயணிகள், ஈக்கோ ரிட்ரீட் நிர்வாகம் சார்பிலேயே கொனார்க் கோயிலுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு பல ஆண்டுகள் அனுபவம் மிக்க வழிகாட்டிகள் மூலம், கோயிலின் சிறப்புகளை விளக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு https://ecoretreat.odishatourism.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.