1990 வரை தென்னாப்பிரிக்காவை ஆட்சி செய்த நிறவெறி அரசு, கருப்பின மக்களைக் கொடூரமாக நடத்தியது. அபார்தீட் (apartheid) அரசு என்றே வெள்ளையின அரசை அழைத்தனர் கருப்பின மக்கள்.
ஆபிரிக்கான்ஸ் மொழியில் ‘பிரிவினை ஆட்சி’ எனும் அர்த்தம் கொண்ட வார்த்தையிலிருந்து உருவானது அபார்தீட் எனும் வார்த்தை. கல்வி, வாழ்விடம், பொது இடங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றில் கருப்பின மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஒடுக்கிவைத்திருந்தது வெள்ளையின அரசு.
1960-ல் ஜோகன்னர்ஸ்பர்க் அருகே உள்ள ஷார்ப்வில்லெ நகரில் நடந்த படுகொலையில் கருப்பின மக்கள் 69 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் சர்வதேச அளவில் எழத் தொடங்கின.
1962 நவம்பர் 6-ல் ஐ.நா. பொதுச் சபை, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசின் கொள்கைகளைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றியது. தென்னாப்பிரிக்காவுடனான பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியது ஐ.நா. 1994-ல் முதன்முதலாக நடந்த சுதந்திரமான தேர்தலில் வென்று அதிபராகி, நிறவெறி அரசுக்கு முடிவுகட்டினார் நெல்சன் மண்டேலா!