இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று கருதப்படும் சிப்பாய் கலகத்துக்கு முன்பாகவே, ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியவர் வீரமங்கை வேலு நாச்சியார்.
1730-ல் ராமநாதபுர மன்னர் மகளாய்ப் பிறந்தார். போர்க் கலைகளில் தேர்ந்தார். 10 மொழிகளில் சரளமாகப் பேசுவார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்தார்.
திடீரென ஆற்காடு நவாபின் பெரும்படை ராமநாதபுரத்தைத் தாக்கிக் கைப்பற்றியது. ஆங்கிலேயப் படைகளோடு கைகோத்திருந்த அப்படை, சிவகங்கைக்கும் குறிவைத்தது. காளையார் கோயிலுக்குச் சென்ற சிவகங்கை மன்னரையும் அவரது இரண்டாவது மனைவியையும் எதிர்பாராத நேரத்தில் சுற்றிவளைத்துக் கொன்றது. துடிதுடித்த வேலு நாச்சியார் சதிகாரர்களை வீழ்த்த சபதம் எடுத்தார்.
ஆங்கிலேயருக்கும், நவாபுக்கும் பரம எதிரியான மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடினார். நாச்சியாரின் உருது மொழிப் புலமையையும் வீரத்தையும் கண்டு உதவ உறுதிமொழி அளித்தார் ஹைதர் அலி.
1780 அக்டோபர் 5-ல் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருடன், பெரும் படையைத் திரட்டிக்கொண்டு திண்டுக்கல் கோட்டையிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார். தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து, சிவகங்கைக் கோட்டையில் மீண்டும் அனுமன் கொடியை ஏற்றினார்.