படம்: ஜி.மூர்த்தி 
வலைஞர் பக்கம்

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை பராமரிப்பிற்காக அடிக்கடி மூடப்படும் மதுரை கே.கே.நகர் ரவுண்டானா: எதிரே வரும் வாகனங்களைப் பார்க்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை பராமரிப்புப் பணிக்காக கடந்த சில வாரங்களாக சுற்றிலும் ரவுண்டானா முழுவதும் தடுப்பு அமைத்து மூடப்பட்டுள்ளதால் எதிர்எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை நகர போக்குவரத்தில் கே.கே.ரவுண்டானா சந்திப்பு போக்குவரத்து முக்கியத்தும் பெற்ற பகுதியாக உள்ளது. இப்பகுதியில் கே.கே.நகர் 80 அடி சாலை, மாட்டுத்தாவணி சாலை மற்றும் பெரியார் பஸ்நிலையம் செல்ல கோரிப்பாளையம் செல்லும் சாலை ஆகியவை சந்திக்கின்றன.

இந்த மூன்று சாலைகள் வழியாகதான் ஒட்டுமொத்த நகர டவுன் பஸ்கள், கார்கள், இருச் சக்கர வாகனங்களும் மாட்டுத்தவாணி, அண்ணாநகர், கே.கே.நகர், அண்ணா பஸ்நிலையம் மற்றும் பெரியார் பஸ்நிலையம உள்ளிட்ட நகர்ப் பகுதிகளுக்கு செல்கின்றன. ஆனால், கே.கே.நகர் ரவுண்டானா சந்திப்பில் போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நிற்பதில்லை.

தானியங்கி சிக்னலும் கிடையாது. வாகன ஓட்டிகள் அவர்களாகவே இப்பகுதியில் எதிர் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்து செல்ல வேண்டும். அதிமுகவினர் இந்த ரவுண்டானாவில் உள்ள எம்ஜிஆர் சிலை, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க வரும்போது மட்டும் போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வந்து நிற்பார்கள். மற்ற நாட்களில் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், பிறகு அது தானாகவே சரியாகிவிடுவதும் இயல்பாக நடக்கும் நிகழ்வாகிவிட்டது.

தற்போது இந்த சாலை சந்திப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் பராமரிப்பு பணி நடப்பதாக தெரிகிறது. அதனால், ரவுண்டானாவை சுற்றிலும் கடந்த சில வாரமாக துணிகளை கட்டி மூடியுள்ளனர். அதனால், இந்த சந்திப்பில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்குத் தெரியவில்லை.

ஏற்கணவே இந்த சந்திப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளே, எதிர் திசையில் வரும் வாகனங்களை மறைக்கும் வகையிலே வைக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றிலும் துணியை கொண்டு மறைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சந்திப்பை கடப்பதற்கு தடுமாகின்றனர்.

அடிக்கடி இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துகளும் நடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி இந்த சந்திப்பில் பராமரிப்புப் பணிக்காக அதிமுகவினர் தன்னிச்சையாக ரவுண்டானாவை மூடி நகரப் போக்குவரத்துக்கு தொந்தரவு ஏற்படுத்துவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT