மீறல் எதுவும் இல்லாமல் வீட்டுக்கு நல்லப் பிள்ளையாகவே வீட்டு சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருந்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லைதான். ஆனால் கொலம்பஸ் அப்படி நினைத்திருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்க முடியாது. கடைசிவரை ஜெனோவாவில் ஒரு ஏழை கம்பளி நெசவாளியின் மகனாகவே வாழ்ந்துவிட்டு இவரும் ஒரு நெசவாளியாக வாழ்ந்து முடிந்திருப்பார் அவ்வளவுதான்.
வாஸ்கோடகாமாவும் இப்படியாக போர்ச்சுகலில் ஒரு ராணுவவீரனின் மகனாக உச்சபட்சமாக ஒரு தளபதியாக வந்திருக்கலாம். ஆனால் புதுமையைப் படைக்க நினைப்பவர்கள் வழக்கமான பாதையிலிருந்து விலக வேண்டும். புதிய தடங்களைப் பதிக்கவேண்டும் என்று நினைத்த மெகல்லன்கள், ராகுல சாங்கிருத்தியாயன்கள், எஸ்.ராமகிருஷ்ண்கள் இங்கு அரிதாகவே உள்ளனர்.
உடனே, உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால், பெரிய பணக்காரராக இருக்கவேண்டுமோ என்று பயந்துவிடவேண்டாம். கேரளாவின் ஒரு சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து சிறகு விரித்து பறந்துதிரிந்த விஜயன் ஒரு சாதாரண டீக்கடைக்காரர்தான்.
யோசித்துப் பாருங்கள். அவர் மற்றவர்களைப் போலல்ல... நிறைய நாடுகளுக்குச் சென்று தான் பெறும் அனுபவத்தோடு தன் மனைவியையும் அழைத்துச்சென்று அவரையும் தூரதேச பயணங்களின் அனுபவத்தில் பங்கேற்க வைத்துள்ளார்.
இந்த மனம் எத்தனை பேருக்கு வரும். இத்தனைக்கும் அவரது ஜீவனம் ஒரு சாதாரண டீக்கடைதான். அந்த வருமானத்தின் சேமிப்பைக்கொண்டுதான் இந்த சாதனையை செய்துள்ளார்.
விஜயனைப் பற்றிய பற்றி ஹரி எம்.மோகனன் இயக்கியுள்ள இந்த சின்னஞ்சிறு ஆவணப்படம் (Docu-Drama) நம்மோடு மிகவும் ஆத்மார்த்தமாக பேசுகிறது... அற்புதமான ஒளிப்பதிவில், அழகான தயாரிப்பிலான இப்படம் வீட்டைவிட்டு வெளியே வர, ஊரைவிட்டு கிளம்ப, உலகை சுற்றிப் பார்க்க மனசிருந்தால் போதும் என்று சொல்கிறது...
</p>