இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் (1922). இவரது முழுப் பெயர், கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன். 1939-ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் முதலில் மின் பொறியியல் துறையில் சேர்ந்தார்.
l ஆனால், விரைவில் தனது இயற்பியல் நாட்டத்தை உணர்ந்துகொண்டு இயற்பியல் துறையில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து 1942-ல் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தில் சர்.சி.வி. ராமனின் கீழ் ஆய்வு மேற்கொண்டு 1947-ல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார்.
l இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இவருக்கு ஆராய்ச்சியாளராக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்பினார். 1952-ல் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1952-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
l இந்தத் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தசைநார் புரதத்தில் சவ்வு என்ற முக்கோண அமைப்பைப் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார். எக்ஸ்-கதிர் படிகவியல், கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
l இந்த ஆய்வுகள் எக்ஸ்-ரே துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது பெப்டைட் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகள், புரதக் கூறுகளின் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள பயன்பட்டது. இது ‘ராமச்சந்திரன் பிளாட்’ என்று குறிப்பிடப்பட்டது.
l மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய தசைநார்ப் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (triple-helical model for structure of collagen) என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியது. 1963-ல் மூலக்கூறு உயிரியல் எனும் இவரது ஆய்வறிக்கை பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.
l படிக இயற்பியல் மற்றும் கிரிஸ்டல் ஆப்டிக்ஸ் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். 1971-ல் தனது சக விஞ்ஞானி ஏ.வி. லக்ஷ்மி நாராயணனுடன் சேர்ந்து எக்ஸ்-ரே வெட்டு வரைவுத் துறையில் சுழற்சி கணிப்பு வழிமுறைகளுக்கான ஆய்வை வெற்றிகரமாக மேற்கொண்டார். தான் கண்டறிந்தவற்றை மிக எளிமையான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்தி உரையாற்றுவார்.
l இவை பள்ளி மாணவர்களுக்குக்கூடப் புரியும் வண்ணம் அமைந் திருந்தன. அறிவியல் மேதை என்பதோடு பல்வேறு தத்துவங்களிலும் பாரம்பரிய இந்திய, மேற்கத்திய இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
l எழுதுவதிலும் திறனும் ஆர்வமும் கொண்டிருந்தார். அறிவியல், மதம், தத்துவம் மற்றும் உபநிடதங்களைக் குறித்து கவிதைகள் இயற்றியுள்ளார். இந்திய இயற்பியல் துறையின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் பெற்றார்.
l கிரிஸ்டலோகிராஃபி துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவால்ஸ் (Ewals) விருது பெற்றார். நோபல் பரிசுக்காவும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். அனைவராலும் விரும்பப்படும் மரியாதைக்குரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஜி.என். ராமச்சந்திரன் 2001-ல் 79-ம் வயதில் மறைந்தார்.