இந்தியா, நேபாளம் நாடுகளில் 20,822 கி.மீ. ஆன்மிக சுற்றுப் பயணம் செய்து 501 கோயில்களை தரிசித்துவிட்டு வந்த காரைக்குடி சகோதரர்களின் சாதனை, 8 சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
காரைக்குடி அருகே கே.வேலங்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டித்துரை துரைராஜ் (30), கார்த்திகேயன் துரைராஜ் (27). மென்பொருள் பொறியாளர்களான இருவரும், கடந்த ஆண்டு நவ.7-ம் தேதி கே.வேலங்குடியில் இருந்து ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் 49 நாட்களில் 20,822 சுற்றுப் பயணம் செய்து இந்தியாவில் 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் நேபாளம் நாட்டில் 501 கோயில்களை தரிசித்தனர். மேலும் அவர்கள் தங்களது பயணத்தை புகைப்படம், வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்நிலையில் அவர்களது சாதனை ஏசியன் புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, வேல்ட் ரிக்கார்ட்ஸ் ஆஃப் இந்தியா, வஜ்ரா வேல்ட் ரெக்கார்டு, அஸ்ஸட் வேர்ல்ட் ரெக்கார்டு, கலாம்ஸ் வேல்ட் ரெக்கார்டு, யுனிவர்சல் அச்சிவ் புக் ஆஃப் ரெக்கார்டு, பியூச்சர் கலாம் ரெக்கார்டு ஆகிய 8 புத்தகங்களில் பதிவாகியுள்ளன. மேலும் அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாண்டித்துரை துரைராஜ், கார்த்திகேயன் துரைராஜ் கூறுகையில், ‘‘ ஆன்மிக சுற்றுப் பயணத்திலும் இளைஞர்களுக்கு சந்தோஷம் உண்டு என்பதை காட்டுவதற்காக தான் நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் அதிலும் எங்களுக்கு 8 விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்று கூறினர்.