விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது இருவரும் கைதுசெய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை வாசத்தின்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. சில காலம் கழித்து விடுதலையானபோது இணைபிரியா தோழர்களானார்கள். அதில் ஒருவரான கல்கி கிருஷ்ணமூர்த்தி பத்திரிகை ஆசிரியராகவும் மற்றொருவரான சதாசிவம் பத்திரிகை விளம்பரமேலா ளராகவும் பணிபுரிந்தனர்.
1940-ல் ‘சகுந்தலை’ படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக நடித்துத் தன் தேன் குரலில் இசை மழை பொழிந்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. படத்துக்கு வசனம் எழுதினார் சதாசிவம். அப்போது மீண்டும் சுதந்திரப் போராட்டத்தில் சத்தியாகிரகம் செய்த கல்கி கிருஷ்ண மூர்த்தி மாயவரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்தவுடன் அவரை அழைத்துச் சென்று சகுந்தலை படம் பார்க்க வைத்தார் சதாசிவம். படம் பார்த்துவியந்த கிருஷ்ணமூர்த்தி, திரைவிமர்சனம் எழுதப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த வெற்றி எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் சதாசிவத்தையும் தம்பதிகளாக்கியது.
அதுவரை பல்வேறு தளங்களில் இணைந்தும் பிரிந்தும் வேலைபார்த்த கிருஷ்ணமூர்த்திக்கும் சதாசிவத்துக்கும் ‘நாம் ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?’ எனும் எண்ணம் உதித்தது.
அடுத்து, 1941-ல் ‘சாவித்திரி’படத்தில் நடித்த எம்.எஸ்., தன் கணவர் மற்றும் தோழரின் கனவு நனவாகத் தன் சம்பளம் முழுவதையும் பத்திரிகை துவங்க அளித்தார். இப்படிக் கலை ஞானமும் தேச பக்தியும் ஒரு சேரக் கொண்ட கல்கி கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ராஜாஜி, டி.கே.சிதம்பரம் ஆகியோர் இணைந்து 1941-ல் தொடங்கியதுதான் ‘கல்கி’பத்திரிகை.
ஐவரில் ஒருவரான கல்கி சதாசிவம் சுதந்திரப் போராட்ட வீரர், கர்னாடக இசைப் பாடகர், வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பற்பல அவதாரங்கள் எடுத்தவர்.
திருச்சி மாவட்டம் ஆங்கரையில் 1902 செப்டம்பர் 4-ல் பிறந்தார் சதாசிவம். பள்ளிப் பருவத்திலேயே பால கங்காதர திலகர், அரவிந்தர் போன்றோரின் தீவிரமான விடுதலைப் போராட்ட முறையால் ஈர்க்கப்பட்டார். பள்ளியிலிருந்து விலகி, சுப்பிரமணிய சிவாவின் ‘பாரத சமாஜ்’ இயக்கத்தில் இணைந்தார். ஒருகட்டத்தில் காந்தியடிகளின் அஹிம்சை வழியில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட அறப் போராட்டத்தில் ஈடுபடலானார். ராஜகோபாலாச்சாரியின் ‘சட்ட மறுப்பு’ இயக்கத்தில் 1920-ல் இணைந்து கிராமந்தோறும் சென்று தேச பக்திப் பாடல்களைப் பாடி, மக்களிடம் விடுதலை வேட்கையைத் தூண்டினார்.
1960-களில் மதுவிலக்குக்காகக் கடுமையாக ராஜாஜி போராடியபோது அவரை முழுமையாக ஆதரித்தார். அரசியல் விடுதலையால் மட்டும் மக்கள் முழுமையான விடுதலை பெற்றுவிட முடியாது. அதற்கு ஒவ்வொருவரும் பல கோணங்களில் பங்களிக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக ‘கல்கி’பத்திரிகையை கிருஷ்ண மூர்த்தியுடன் இணைந்து துவக்கினார். 1954-ல் கிருஷ்ண மூர்த்தியின் மறைவுக்குப் பிறகு, கல்கி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அவருடைய இறுதிக் காலம்வரை எந்தச் சமரசமும் இன்றி சிறந்த கலைஞராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட்டார்.