தென்காசியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேங்காய்ச் சிரட்டையில் கலைப் பொருட்கள் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
தென்காசியில் உள்ள ஐந்து வர்ணம் பெரியதெருவைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் என்பவரின் மகன் தமிமுன் அன்சாரி (18).
பிளஸ் 2 முடித்துள்ள இவர், சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார். தந்தையை இழந்த இவருக்கு, 8-ம் வகுப்பு படிக்கும்போதே சாக்பீஸில் கலைப் பொருட்கள் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
இவரது தாயார் சபுரால், மாவு விற்று குழந்தைகளை வளர்த்து வருகிறார். தமிமுன் அன்சாரிக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். சாக்பீஸில் கலைப் பொருட்களை உருவாக்கிய ஆர்வம் அத்தோடு நின்றுவிடாமல், சிரட்டையில் விதவிதமான கலைப் பொருட்களை வடிவமைக்க கரோனா ஊரடங்கு காலம் இவருக்கு உதவியுள்ளது.
கிண்ணம், கம்மல், ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான கலைப் பொருட்களை தமிமுன் அன்சாரி உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி கூறியதாவது:
ஆறாம் வகுப்பு படிக்கும்போது விளையாட்டாக சாக்பீஸில் ஏதாவது வடிவங்களை உருவாக்கினேன். இதைப் பார்த்த எனது குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர்.
சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு, 8-ம் வகுப்பு படிக்கும்போது சாக்பீஸில் விதவிதமான கலைப் பொருட்களை உருவாக்கினேன். எனது மாமா அகமதுஷா பரோட்டா கடை வைத்துள்ளார். அதனால், சிரட்டைகள் அதிக அளவில் கிடைக்கும். சிரட்டைகள் கிண்ணம்போல் இருப்பதால், முதலில் கிண்ணம் உருவாக்கினேன்.
பின்னர், கரண்டி, கப் என பல்வேறு பொருட்களை உருவாக்கினேன். கரோனா ஊரடங்கு காலத்தில் வெளியே எங்கும் செல்ல முடியாததால் அதிகமாக நேரம் கிடைத்தது. எனவே, இதையே வாய்ப்பாக பயன்படுத்தி சிரட்டையில் மேலும் பல்வேறு வகையான கலைப் பொருட்களை உருவாக்கினேன்.
கம்மல், செயின், ஆங்கில எழுத்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை உருவாக்கினேன். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருப்பதாக பாராட்டியதுடன் விலைக்கும் கேட்டனர். நான் தயாரிக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறேன்.
ஊரடங்கு காலத்தில் கலைப் பொருட்கள் செய்ம் போது எனது தம்பி முகமது நிசார் (18) எனக்கு உதவியாக இருந்தார். அதில் எனது தம்பிக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தற்போது எனது தம்பியும் என்னுடன் சேர்ந்து கலைப் பொருட்களை உருவாக்கி வருகிறார்.
எனது முயற்சிகளுக்கு எனது தாயார், பெரியம்மா, மாமா ஆகியோரும் பெரிதும் ஊக்கம் அளித்து வருகின்றனர். சிரட்டையில் மேலும் பல நுணுக்கமான கலைப் பொருட்களை உருவாக்கி வருகிறேன்” என்றார்.