பாலிவுட்டின் சிறந்த நகைச்சுவை நடிகர், இயக்குநரான மெஹமூத் அலி (Mehmood Ali) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பம்பாயில் (1932) பிறந்தவர். தந்தை புகழ்பெற்ற நாடக, திரைப்பட குணச்சித்திர நடிகர். சிறு வயதிலேயே தந்தையுடன் பல ஸ்டுடியோக்களுக்கு சென்றார். ‘கிஸ்மத்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக வேண்டாவெறுப்பாக நடித்தார்.
l டாக்ஸி ஓட்டுவது, முட்டை விற்பனை என பல வேலைகள் செய்தார். இயக்குநர் பி.எல்.சந்தோஷியிடம் கார் ஓட்டுநராக இருந்தார். பின்னாளில் அவரது மகன் ராஜ்குமார் சந்தோஷி, இவருக்கு ‘அந்தாஸ் அப்னா அப்னா’ திரைப்படத்தில் வாய்ப்பு அளித்தார்.
l நடிகராக சாதிக்க வேண்டும் என்று திருமணத்துக்குப் பிறகு முடிவு செய்து களம் இறங்கினார். முதலில் ‘சிஐடி’ என்ற படத்தில் நடித்தார். பிறகு ‘பியாசா’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
l சரியான வேடம் கிடைக்காததால், நடிகர் கிஷோர்குமாரிடம் வாய்ப்பு கேட்டார். அவரோ, ‘‘என் போட்டியாளருக்கு நானே எப்படி வாய்ப்பு கொடுப்பது?’’ என்றாராம், அதற்கு இவர், ‘‘நான் ஒருநாள் இயக்குநராகி, உங்களை என் படத்தில் நடிக்க வைக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். சொன்னபடியே, பின்னர் தான் தயாரித்த ‘படோசன்’ திரைப்படத்தில் கிஷோர்குமாரை நடிக்க வைத்தார். அது 1970-களின் மாபெரும் வெற்றிப் படம்.
l ‘பர்வரிஷ்’ திரைப்படத்தில் (1958) முன்னணி வேடத்தில் நடித்தார். குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்தார். கும்னாம், பியார் கியே ஜா, ஹை பியார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
l ‘சசுரால்’ (1961) என்ற திரைப்படத்தில் நடிகை ஷோபா கோட்டேயுடன் ஜோடி சேர்ந்தார். இது சிறந்த காமெடி ஜோடியாக புகழ்பெற்றது. ‘லவ் இன் டோக்கியோ’, ‘ஜித்தி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர்கள் இணைந்து நடித்தனர். ஐ.எஸ்.ஜோஹர் என்ற நகைச்சுவை நடிகருடன் இணைந்தும் பல படங்களில் நடித்தார். இவர்களது காமெடியும் பிரபலமடைந்தது.
l தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ‘பூத் பங்களா’ என்ற சஸ்பென்ஸ் காமெடி - த்ரில்லர் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என்ற அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவர். தன் படங்களில் சில பாடல்களுக்கு இவரே இசையமைத்தார். சில பாடல்களைப் பாடியும் உள்ளார்.
l அமிதாப் பச்சன், இவரது சகோதரனின் நெருங்கிய நண்பர். இவரது வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது அவர் வளரும் நடிகர். தான் தயாரித்த ‘பாம்பே டு கோவா’ நகைச்சுவைத் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார்.
l ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். தனக்கு முதன்முதலாக ஒரு நல்ல வேடம் அளித்த தயாரிப்பாளர், இயக்குநர் குரு தத் புகைப்படத்தை கடைசிவரை தன் படுக்கை அறையில் வைத்திருந்தார்.
l இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தவர். 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். ‘பாய்ஜான்’ என்று திரையுலகினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர். ‘கிங் ஆஃப் காமெடி’ என்று போற்றப்படும் மெஹமூத் அலி 72-வது வயதில் (2004) மறைந்தார்.