செல்லப் பிராணியே என்றாலும் அதனை சரியாகப் பராமரித்து வளர்க்காவிட்டால் மிகக் கொடிய நோய்களுக்கு உள்ளாகக் கூடும் என எச்சரிக்கிறார் திருப்புவனம் அரசு கால்நடை மருத்துவர் மோகன்தாஸ்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 28 சர்வதேச ரேபீஸ் நோய்த் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஆசியாவிலும், ஆசிய அளவில் இந்தியாவிலும்தான் ரேபீஸ் நோய்களால் உயிரிழப்புகள் அதிகம் நேரிடுகின்றன.
குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பலியாகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 60,000 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் இந்நோய் குறித்த அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
ரேபீஸ் நோய் குறித்தும் அதிலிருந்து செல்லப் பிராணிகளையும் நம்மையும் தற்காத்துக் கொள்வது குறித்து தி இந்து தமிழ் இணையதளத்துக்கு பேட்டியளித்தார் திருப்புவனம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் உ.மோகன்தாஸ்.
ரேபீஸ் நோய் பற்றி ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனக் கருதுகிறீர்கள்?
ரேப்டோ எனும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் நோய் தான் ரேபீஸ். ரேபீஸ் நோய் தாக்கினால் 100% மரணம் நிச்சயம். மருந்தே இல்லாத நோய். மரணம் மட்டுமே தீர்வாகும் நோய்க்கு தற்காப்பைவிட வேறு என்ன விழிப்புணர்வு இருந்துவிட முடியும். அதனாலேயே ரேபீஸ் நோய்த் தாக்கம் ஏற்படாமல் தடுப்பதில் விழிப்போடு இருக்க அரசாங்கம் அறிவுறுத்துகிறது.
ரேபீஸ் எப்படிப் பரவுகிறது?
ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய், பூனை, குரங்கு, நரி, வவ்வால், கீரிப்பிள்ளை, ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்ற விலங்குகளையோ அல்லது மனிதரையோ கடிக்கும்போது இந்நோய்ப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ் நீரிலேயே ரேபீஸ் வைரஸ் துகள்கள் இருக்கும். ஆகையால் ரேபீஸ் தாக்கிய விலங்கு திறந்த உடல் காயங்களில் நாவினால் தீண்டினாலும் இந்த நோய் தாக்கக்கூடும். மூளையைத் தாக்கி நரம்பு மண்டலத்தை சிதைத்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
ரேபீஸ் நோயின் அறிகுறிகள் என்னென்ன?
வெறிநாய் கடித்த 2 முதல் 12 வார காலத்திற்குள் காய்ச்சலுடன் நோய் அறிகுறி ஆரம்பிக்கும். சில நேரங்களில் 6 வருடத்தில் கூட நோய் அறிகுறி தெரியலாம். தூக்கமின்மை, படபடப்பு, பயம், உடற் பாகங்கள் செயலிழத்தல், பழக்கவழக்கங்களில் மாற்றம், அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், தண்ணீரைப் பார்த்து அச்சம், குழப்பம், நினைவாற்றல் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படும். பொதுவாக ரேபீஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் 2 முதல் 10 நாட்களுக்குள் இறந்துவிடுவார்கள்.
இதையெல்லாம் கேட்டால் செல்லப் பிராணி வளர்ப்பதில் இருக்கும் ஆசையே போய்விடாதா?
செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், அவற்றை கவனமாகப் பராமரிக்க வேண்டும். நமக்கெல்லாம் ரேபீஸ் மட்டுமே நாய் கடித்தால் வரும் என்று தெரிந்துவைத்துள்ளோம். ரேபீஸ் தவிர 'எக்கினோகாக்கஸ்' என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் 'ஹைடாட்டிட்' என்ற கொடிய நோயும், நாயினால் பரவுகிறது. இதுபோல் நாயின் ரோமங்களால் ஏற்படும் சுவாசக்கோளாறு என நிறைய உள்ளன. நாய்களை நோய் தாக்காமல் பாதுகாத்தால் போதும் நன்றியுள்ள அந்த ஜீவனுடன் நாமும் மகிழ்ச்சியாய் நேரத்தைப் போக்கலாம். நாய்கள் தான் அதிகப்படியாக வளர்க்கப்படும் செல்லப் பிராணியாக இருப்பதாலும், ரேபீஸ் தாக்கமும் நாய்களாலேயே அதிகமாக இருப்பதாலும் அவற்றிற்கான தடுப்பூசி அட்டவணையைப் பட்டியலிடுகிறேம். இதன்படி தடுப்பூசி போட்டுவந்தால் நாயையும், வளர்ப்போரையும் நோய்களில் இருந்து முழுமையாகப் பாதுகாக்கலாம்.
• நாய்க்குட்டி பிறந்த 4-வது வாரம் (28வது நாள்) – DP தடுப்பூசி
• நாய்க்குட்டி பிறந்த 8-வது வாரம் (56வது நாள்) – DHPPi தடுப்பூசி
• நாய்க்குட்டி பிறந்த 10 முதல் 12வது வாரம் (70 முதல் 90 நாட்களுக்குள்) – DHPPi (Booster Dose)
• 12வது வாரம் (90-வது நாள்) – Anti Rabies Vaccine (ARV) வெறிநோய்த் தடுப்பு நோய்
• ஒவ்வொரு வருடமும் DHPPi மற்றும் ARV ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும்.
DP தடுப்பூசி (D for Distemper and P for parvo viral infection) – டிஸ்டம்பர் மற்றும் பார்வோ நோயைத் தடுக்கும்.
DHPPi – இது கேனைன் டிஸ்டம்பர் (Canine Distemper), பார்வோ வைரஸ் (Parvo Viral Enteritis), இன்பக்ஸுயஸ் கேனைன் கெப்படைட்டிஸ் (Infectious Canine Hepatitis), கேனைன் பாரா இன்ஃப்ளூயன்சா (Canine Parainfluenza) மற்றும் கெனல் காஃப் (Kennel Cough) ஐந்து கொடிய நோய்களைத் தடுக்கின்றது.
Lepto – எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோயைத் தடுக்கின்றது.
ARV (Anti Rabies Vaccine) – வெறிநாய்க்கடியால் ஏற்படும் (Rabies) வெறிநோயைத் தடுக்கின்றது.
அரசு கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு செப்.28-ம் தேதியன்று இலவச ரேபீஸ் தடுப்பூசி முகாம்களையும் நடத்துகிறது. பொதுமக்கள் தங்களது செல்லப்பிராணிகளை அங்கு அழைத்துச் சென்றும் பயன்பெறலாம்.
தடுப்பூசிகள் பற்றி விவரமாக எடுத்துரைத்தீர்கள். ஒருவேளை தெருநாய் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக நாய்க்கடித்தவுடன் அந்த இடத்தை சோப்பு போட்டு குறிப்பாக கார்பானிக் அமிலம் அதிகமுள்ள சோப்பு கொண்டு 5 நிமிடங்களுக்கும் குறையாமல் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் அந்த இடத்தில் மருந்தகங்களில் கிடைக்கும் போவிடோன் ஐயோடின் களிம்பைப் பூச வேண்டும். இதனால் காயத்தில் உள்ள வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இது வெறும் முதலுதவி.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கண்டிப்பாக செல்ல வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய், தெரு நாய் என்றெல்லாம் பாரபட்டசமில்லை. நாய் கடித்தால் முதலுதவி முடித்து மருத்துவமனைக்குச் செல்லவும். வீட்டு நாய் கடித்தால் மருத்துவரிடம் செல்லும்போது தங்களின் நாய்க்கு தடுப்பூசி வழங்கும் குறிப்பு அடங்கிய கையேட்டையும் எடுத்துச் செல்லவும். அதற்கேற்ப மருத்துவர் சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
மருத்துவரின் அறிவுரைப்படி 0, (அதாவது நாய் கடித்த நாள்), 3, 7, 14, 28 மற்றும் 45-வது நாட்களில் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். தொப்புளைச் சுற்றி தடுப்பூசி என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. தற்போதெல்லாம் கைகளில் போடப்படுகிறது. தெருநாய் கடித்திருந்தால் கடித்த நாயை 10 நாட்களாவது கண்காணிக்க வேண்டும். அதற்குள் நாய் இறந்துவிட்டால் நகராட்சி, மாநகராட்சியில் தெரிவித்தால் அந்தப் பகுதியில் வசிப்போருக்கு எச்சரித்து தடுப்பூசி போடப்படும்.
பிணவாடை பிடித்தால் கிருமி தாக்காது, கடித்த நாயின் உரிமையாளின் வீட்டில் ஒரு குவளை தண்ணீர் வாங்கிக் குடித்தால் நோய் வராது என்பதெல்லாம் கட்டுக்கதை. மீண்டும் வலியுறுத்துகிறேன், நோய் தாக்கினால் மரணம் மட்டுமே நிச்சயம். அதனால் தற்காப்பும் தடுப்பூசியும் மட்டுமே தீர்வு.
தெருவிலிருந்து நாய்களை எடுத்து வளர்க்கலாமா?
நிச்சயமாக வளர்க்கலாம். எல்லோரும் வெளிநாட்டு நாய்களையே வாங்கி வளர்க்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில் வேறொரு தட்பவெப்பத்துக்கு பழகிய நாயை நாம் வாங்கி வளர்ப்பதால் அவற்றை ஒருவகையில் துன்புறுத்தவே செய்கிறோம். இரண்டாவதாக, நம்மூரில் உள்ள நாய்களை இதனால் பராமரிக்க ஆளில்லாமல் போகிறது. குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் உரிமையாளர் இல்லாத செல்லப் பிராணியைப் பார்க்கவே முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால், ஆசிய நாடுகளில் அப்படியில்லை. அதுவும் குறிப்பாக இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். தெருவிலிருக்கும் நாய்க்குட்டிகளை வளர்த்து பராமரிக்க அரம்பித்தால் வெறிநாய்கள் உருவாவதையும் தடுக்கலாம். தெருநாய்களை தத்தெடுக்கும்போது மேற்கூறியபடி அவற்றிற்கு தடுப்பூசிகளை வழங்கினால் போதும். இவைதவிர, தெருநாய்களுக்கும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அவ்வப்போது வெறிநோய் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.
செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு உங்களின் அறிவுரை என்ன?
செல்லப் பிராணிகளை உங்களின் பகட்டின் வெளிப்பாடாகவோ அல்லது வெறும் வீட்டுக்குப் பாதுகாவல் என்றோ மட்டும் கருதி வளர்க்காதீர்கள். செல்லப் பிராணிகள் வளர்த்தால் அவற்றை முறையாகப் பராமரியுங்கள். சரிவிகித உணவு, தடுப்பூசிகள், குறிப்பிட்ட காலத்தில் இனச்சேர்க்கை என அனைத்துமே அவற்றிற்கு அவசியம். அவற்றை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுதல் அவசியம். ஆனால், எல்லா தடுப்பூசிகளும் போடும்வரை அவற்றை நீண்ட தூர பயிற்சிக்கு அழைத்துச் செல்லாதீர்கள். செல்லப் பிராணிகளுடம் நேரம் செலவிடுங்கள். சிலர் செல்லப் பிராணிகளுக்கு குளிர்பானமும், சிப்ஸ் போன்ற உணவுகளை வழங்குகின்றனர். நாய்க்கு எது உணவோ அதை மட்டும் வழங்குங்கள். பொதுவாக நாட்டு நாய்களை வளர்த்தால் வீட்டில் சமைக்கும் சோறு, தயிர், பால், முட்டை அல்லது அசைவ உணவு குழம்பு ஊற்றியே கொடுக்கலாம். பராமரிப்புச் செலவும் குறைவு. நீங்கள் உங்கள் செல்லப் பிராணியை உங்கள் குழந்தையாகவேக் கருதலாம். அப்படியென்றால் குழந்தையின் மீதான அக்கறையை அவற்றின் மீதும் செலுத்துங்கள். உலகில் இருந்து 2030-க்குள் ரேபீஸை விரட்டிவிட வேண்டும் என்ற குறிக்கோளை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. அதை நோக்கி நாம் நகர்வோம் என்றார்.
நாய் - மனித மோதலைத் தடுக்க தத்தெடுப்பது மட்டுமே தீர்வு- எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன்
இந்தியாவில் 60 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளரும் செல்லப்பிராணி வளர்ப்பவருமான அபர்னா கார்த்திகேயன். தெருநாய்களால் தாக்கப்படுவது குறையவேண்டும் என்றால் வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்ப்பதைவிடுத்து உள்ளூர் நாய்களை வளர்க்க முன்வர வேண்டும். அதுவும் குறிப்பாக தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். தெருவில் திரியும் ஒரு நாய் சராசரியாக அதன் வாழ்நாளில் 60 குட்டிகள் வரை ஈன்றுவிடுகிறது. அதையே வீட்டில் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தால் அவற்றிற்கு முறையாக தடுப்பூசி வழங்கியும், கருத்தடை செய்தும் பராமரிக்கலாம். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட், ஹஸ்கியை வளர்ப்பதைக் காட்டிலும் தெருநாய் வளர்ப்பில் செலவு மிகமிகக் குறைவு. அதேவேளையில் நிறைவான அன்பையும், நம்பிக்கையையும் தரக்கூடியவை.
அபர்ணா கார்த்திகேயன் உடன் செல்லப்பிராணிகள் புச்சு (வெள்ளை நிற நாய்), ஷிங்மோ ( பழுப்பு நிற நாய்)
இந்தியா போன்ற வளரும் நாட்டில் வெளிநாட்டு நாயை வாங்கி அதற்கேற்ற தட்பவெப்பத்தைத் தர ஏசி போட்டு பராமரிக்கும் செயலை நான் முட்டாள்தனம் என்றே சொல்வேன். நான் இரண்டு தெருநாய்களைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். அவற்றைப் பராமரிப்பதில் பெரிய செலவேதும் இல்லை. மும்பையில் நான் வாழும் பகுதியில் இருக்கும் அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசியும், கருத்தடை ஊசியும் போடப்பட்டுள்ளது. ஆனாலும் அன்றாடம் எங்கிருந்தாவது புதிதாக குட்டிகளைக் கொண்டுவந்து விட்டுச் செல்கின்றனர். தத்தெடுத்து பராமரித்தல் மட்டுமே ரேபீஸ் உள்ளிட்ட இன்னும் பல நோய்களில் இருந்து சமுதாயத்தைப் பாதுகாக்க சிறந்த வழி.