இந்தியாவில் தினமும் கரோனா பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேநேரம் நோயின் பிடியிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
தனி நபரின் வருவாயில் தொடங்கி சிறு, குறு தொழில்கள், மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை வைத்திருப்பவர்கள் வரை நாட்டின் பொருளாதாரமே தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாக ‘இந்தப் பேரிடர் இன்னல்களையும் கடந்து வெல்வோம்…’ என்னும் கருத்தையும் ஆழமாக மக்களின் மனத்தில் பதிய வைப்பதற்குத் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுக்கத் தவறுவதே இல்லை.
12 நாட்டு மக்களின் உதவி
இந்தப் பின்னணியில் சென்னையைச் சேர்ந்த இளம் பாப் இசைப் பிரபலமான மல்லி (மாளவிகா மனோஜ்) எழுதி இசையமைத்து யூடியூபில் வெளியிட்டிருக்கும் ‘லாக்டவுன் ஏந்தம்’ என்கிற ஆங்கிலப் பாடல், எல்லைகளைக் கடந்து உலகத்தின் பல நாடுகளிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'ஏஜ் ஆஃப் லிம்போ' என்னும் மியூஸிக் வீடியோவின் சுருக்கமான இதை ‘லாக்டவுன் ஏந்தம்’ என்று அழைப்பதற்குக் காரணம், ஊரடங்கு காலத்தில் உலகின் பல பகுதிகளிலும் இந்தப் பாடலுக்கான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
“இந்த இசை ஆல்பம் அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, பிரேசில், ஆஸ்திரியா, ஹாங்காங், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்களின் நிதி திரட்டல் உதவியுடன் தயாராகி இருக்கிறது” என்கிறார் மல்லி.
மக்களின் இசை
பீட்டில்ஸ், தி கார்பெண்டர்ஸ், தி பீ ஜீஸ், தி பீச் பாய்ஸ் ஆகிய புகழ் பெற்ற 1960, 70-களின் பாப் ஆல்பங்களை நினைவுபடுத்தும் விதத்தில் வெளிவந்திருப்பது 'அப்ஸலுயுட்'. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளைச் சர்வ சாதாரணமாக மீறுவதையும் அதை எதிர்க்கத் துணியும் மக்களின் குரல்வளையை நசுக்குவதையும் மையமாகக் கொண்டு மக்களின் இசையாக இந்தப் பாடலை எழுதி, இசையமைத்துப் பாடியிருக்கிறார் மல்லி.
இவரின் முந்தைய ஆல்பம் 'ஈபி ரஷ் மற்றும் பிளே', 'மேங்கோ ஷோவர்ஸ்' ஆகியவை ஏற்கெனவே உலகம் முழுவதும் இருக்கும் பாப் இசை ரசிகர்களைக் கவர்ந்தவை. அண்மையில் பிபிசியின் இசை குறித்த ஆவணப்படமான 'ரிதம்ஸ் ஆஃப் இந்தியா'வில் இடம்பெற்றிருப்பவர், பிபிசியின் ஆசியாவுக்கான வானொலியில் அஷாந்தி ஓம்கர் நடத்தும் நிகழ்ச்சியிலும் மல்லி பங்கெடுத்திருக்கிறார்.
அதோடு, உலகின் மிகவும் பிரபலமான 'ஸ்பாடிஃபை' நடத்தும் ரேடார் நிகழ்ச்சியில் உலகம் முழுவதுமிருந்து இடம்பெற்றிருக்கும் 36 பேரில் மல்லியும் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் இசையில் ஆங்கிலப் பாடல்களை எழுதிப் பாடியிருக்கிறார் மல்லி.
பாடலைக் காண: