‘கருணை நிறைந்த இறைவன் நாமத்தில், சாதத் ஹசன் மண்ட்டோ இங்கே படுத்திருக்கிறான். அவனுடன் சிறுகதைக் கலையின் எல்லா ரகசியங்களும் மர்மங்களும் புதைந்திருக்கின்றன. பல டன் அளவு மண்ணுக்கு அடியில் படுத்திருக்கிறான், யார் சிறந்த கதாசிரியன், அவனா அல்லது இறைவனா என்கிற திகைப்பில்…’ என்று தனது கல்லறையில் எழுதச் சொன்னவர் உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோ.
இந்தியப் பிரிவினையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்களைப் பற்றியும், ஏழைத் தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தரகர்கள் என்று கொந்தளிப்பான உலகைத் தனது சிறுகதைகளில் சித்தரித்தவர் சாதத் ஹசன் மண்ட்டோ. உருது நவீன இலக்கியத்தின் பிதாமகராகப் போற்றப்படும் மண்ட்டோவைப் பற்றிய திரைப்படம் இம்மாதம் 11-ம் தேதி பாகிஸ்தானில் வெளியானது.
ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படத்தை, பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகரும் இயக்குநருமான சர்மாத் சுல்தான் கூஸத் இயக்கியிருக்கிறார். மண்ட்டோ பாத்திரத்தில் நடித்திருப்பதும் அவர்தான். அவரது வாழ்வின் முக்கியமான தருணங்களும், கற்பனைச் சம்பவங்களும், அவரது படைப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் கலந்த படைப்பாக வெளியாகியிருக்கிறது இப்படம்.
மண்ட்டோ எழுதிய ‘லைசென்ஸ்’, ‘டண்டா கோஷ்ட்’, ‘பெஷாவர் சே லாகூர்’ போன்ற சிறுகதைகளிலிருந்து சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. “இந்தியாவிலும் இந்தப் படம் வெளியாக வேண்டும். திரைப்பட விழாக்களில் இப்படம் பங்குபெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார் சர்மாத் சுல்தான் கூஸத்.
- சந்தனார்