1801 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஆறு மாதங்கள் காளையார்கோயில் காட்டில் நடந்த போர், 1857 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சிப்பாய்க் கலகம் போன்று, சொந்தப் பிரச்சனைக்காக அல்லாது, பொதுப் பிரச்சனைக்காக நடந்த போர்.
வெள்ளைய அதிகாரத்தை எதிர்த்த முதல் பெரும் போர். பெருந்திரளான போராளிகளுடன் தென்னிந்தியாவின் மிக நீண்ட நிலப்பரப்பில், பூனாவிலிருந்து நாங்குநேரி வரையிலான 1100 கிமீ தூரத்தை இணைத்து மக்களால் முன்னெடுக்கப்பட்டப் போர்.
அதனால்தான் மீரட்டின் சிப்பாய் கலகம் நடப்பதற்கு ஐம்பத்தி ஆறு ஆண்டுக்கு முன்பே சின்ன மருதுபாண்டியர் தலைமையில் நடந்த காளையார்கோயில் போரை இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றாசிரியர் ராஜய்யன் தன் ஆய்வின் வழியாக அறுதியிட்டுக் கூறுகிறார்.
மக்களுக்குப் போராட வேண்டும் என்ற எண்ணமே எழக்கூடாது என்பதற்காக, கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முறையாக அவர்களை நாடுகடத்த முடிவெடுத்தது. சொந்தத் தேசத்திலிருந்து நாடு கடத்தி, முகம் தெரியாத பினாங்குத் தீவில் இறக்கி விட்டது.
அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த முறைதான் ‘காலா பாணி’ எனும் கருப்புத் தண்ணீர். இந்த காலா பாணியை ’தீவாந்திர தண்டனை’ என்றும் சொல்லுவார்கள். மரண தண்டனை ஒரு வகையில் நிம்மதி.
ஆனால், இக் காலாபாணி, மரண தண்டனையை விடக் கொடுமையானது. கண்காணாத தேசத்தில், அதுவும் இருநூறு வருடங்களுக்கு முன்னால், நினைத்துப் பார்க்கவே முடியாத துயரம்.
இந்த துயரத்திற்கு உள்ளான முதல் அரசராக சிவகங்கையின் வேங்கை பெரிய உடையணத் தேவன் இருக்கிறார். அவருடன் 72 கூட்டாளிகளையும் கிழந்தியக் கம்பெனி நாடு கடத்தியது. தூத்துக்குடித் துறைமுகத்தில் இருந்து பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டவர்களின் வாழ்க்கை மிகவும் துயரமானது.
73 பேர்களையும் 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து லெப்டினென்ட் ராக்கெட் தலைமையிலான படை, அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றியது. வழியில் எங்குமே நிற்காத 66 நாட்களின் தொடர் கடற்பயணம்.
பயணத்தின்போதே மூன்று போராளிகள் இறந்துவிட்டனர். பினாங்குக் கடற்கரையில் இறக்கி விட்டவுடன் பத்துக்கு மேற்பட்டவர் மனப்பிறழ்வு ஏற்பட்டு, தீவுக்குள் ஓடிவிட்டனர்.
காலா பாணி எனும் தீவாந்திர தண்டனைப் பெற்று, பினாங்கில் கரை இறங்கி நின்ற போராளிகளை என்ன செய்வது என்று லெப்டினென்ட் கவர்னர் ஜார்ஜ் லெயித்திற்கும் தெரியவில்லை. ஏனெனில், கம்பெனி முதன்முறையாக அப்போதுதான் அங்கு அரசியல் கைதிகளை அனுப்பி வைத்திருந்தது.
அதனால் இவர்களை கோட்டை கட்டும் வேலைக்கு பயன்படுத்தலாமா? அல்லது பினாங்குக் கோட்டையில் வெறுமனே அடைத்து வைக்கலாமா? என அந்த ஆங்கிலேய கவர்னருக்கு குழப்பம் ஏற்பட்டது.
காலா பாணி கைதிகளில் சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருது பாண்டியனின் மகன் துரைசாமி, நான்கு பாளையக்காரர்கள் என்று முக்கியஸ்தர்கள் இடம் பெற்றிருந்தனர். இதனால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தர வேண்டுமா? என்ற ஐயம் பினாங்கு கவர்னருக்கு எழுந்தது.
இதற்காக, கொல்கத்தாவிலிருந்த கவர்னர் ஜெனரலுக்குக் கடிதம் அனுப்பட்டது. வேங்கை பெரிய உடையணத் தேவன், துரைசாமிக்கு கூடுதல் ஓய்வூதியமும், பத்துப் பேருக்கு குறைவான ஓய்வூதியமும், மீதி போராளிகளுக்கு ஓய்வூதியம் இல்லை என்றும் ஆணை பெறப்பட்டது.
பினாங்கிற்கு வந்த ஒரு மாதத்தில் வேங்கை பெரிய உடையண தேவன் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.
அங்கிருந்து இருபது நாள் கடற்பயணத்தில் சுமித்திரா தீவிலிருந்த பென்கோலன் நகருக்கு அவர் கொண்டுவரப்பட்டார்.
அங்கிருந்த மால்பரோ கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். கோட்டைக்குள் நிலவிய கடுமையான சுகாதாரக் கேடு, குறிப்பாக மலேரியாக் கொசுக்கடியின் காரணமாக வேங்கை, பென்கோலன் வந்த நான்கே மாதத்தில் இறந்த நாள் இன்று ஆகும்.
அப்போது அவருக்கு வயது 34. காலா பாணி கைதிகளாக அறிவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 73 பேரில் தென்னிந்தியாவின் பல்வேறுபட்ட ஜாதி, மதத்தினரும் இருந்தனர்.
மறவர்கள், பிராமணர், அரிஜனங்கள், நாடார்கள், கத்தோலிக்கர், நாயக்கர்கள், கவுண்டர்கள், பிள்ளைமார்கள், முகம்மதியர், ஒட்டர், பரதவர் என்று அனைவரின் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்ட தென்னிந்தியப் புரட்சி, வெளிக்கொணரப்பட வேண்டும்.
ஆங்கிலேயே அதிகாரிகளே நம் ஆட்சியாளர்களின் வீரம், மானஉணர்ச்சி கண்டு பிரமித்த கலாபக் காலம். காளையார்கோயில் போரிலும், தூத்துக்குடியில் காலா பாணிகளைக் கப்பலில் ஏற்றிவிட்டதையும், பின்பு 20 வருடங்கள் கழித்து, பினாங்கில் துரைசாமியைச் சந்தித்ததையும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ் தனது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.
‘இவர்களது வீரம், அவர்களுக்கு ஒன்றுபட்ட மரணத்தைக் கொடுத்தது. வரலாறு அவர்களுக்கு ஒன்றுபட்டப் புகழைக் கொடுத்தது. இனிவரப் போகும் சந்ததியினர் அவர்களுக்கு ஒன்றுபட்ட நினைவுச் சின்னத்தை வழங்குவார்கள்.’ எனும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷின் இந்த வார்த்தைகள் இன்று உண்மையாகி வருகிறது.
-முனைவர்.மு.ராஜேந்திரன், ஐஏஎஸ்
குறிப்பு: கட்டுரை ஆசிரியரான முனைவர்.மு.ராஜேந்திரன்.ஐஏஎஸ் இந்த வீர வரலாற்றை ’காலா பாணி’ எனும் பெயரில் நாவலாக பதிவு செய்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இந்நாவலுக்காக அவர் பினாங்கிற்கும், சுமத்திரா தீவிற்கும், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்றுள்ளார்.