கரோனா காரணமாகக் கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்த நிலையில், மெதுவாகப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் திறப்பது, ஆலயங்கள் திறப்பு எனத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நகரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
புதிய இயல்புக்கு நாடு திரும்பும் இந்த நிலையை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ‘இந்தத் தளர்வுகள் எல்லாமே, முழுமையாகக் கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து நாம் மீண்டுவிட்டோம் என்றோ, விடுதலை அடைந்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்துக்கோ..’ என்று நாம் நினைத்தோம் என்றால், அது மிகப்பெரிய தவறு.
தனி மனிதப் பொருளீட்டலின் அவசியத்துக்காகவும் நாட்டை ஓரளவுக்குப் பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்பதற்கான குறைந்தபட்ச நடவடிக்கை இது என்ற அளவில்தான் இந்தத் தளர்வுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தனி மனித இடைவெளி, முகக் கவசம் அணிவது, கைகளை சோப்பு அல்லது சானிடைசரால் சுத்தம் செய்வது, ஆரோக்கியமான உணவு, அவசியத்துக்கு மட்டுமே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது, அத்தியாவசியமான பணியை முடித்துவிட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாக திரும்புவது, வீட்டுக்கு வந்தவுடன் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என தனி மனித சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம் நாட்டின் சுகாதாரம் காப்பாற்றப்படும் எனும் கருத்தை மையப்படுத்தி ‘சுத்தம் செய்தே யுத்தம் செய்வோம்’ என்னும் பாடலை இசையமைத்துப் பாடி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ்.
பா.விஜய்யின் இந்தப் பாடலை ஸ்ரீநிவாஸுடன் இணைந்து ராகுல் நம்பியார், ஷரண்யா ஸ்ரீநிவாஸ், தேவன் ஏகாம்பரம் ஆகியோர் பாடியிருக்கின்றனர். ‘இந்த சுத்தம் சுத்தம் சுகந்தம் அதற்கு அர்த்தம் அர்த்தம் வசந்தம்…’ என்ற வரிகள், பாதுகாப்பான புதிய உலகத்தை நம்பிக்கையோடு வரவேற்கும் துள்ளல் இசையோடு நம் மனதை லேசாக்குகிறது!
‘சுத்தம் செய்தே யுத்தம் செய்’ பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=xPU6zswQWAo