(இடது) சுஷில் குமார் க்ரோர்பதி நிகழ்ச்சியில் - (வலது) தற்போது 
வலைஞர் பக்கம்

க்ரோர்பதி நிகழ்ச்சியில் 5 கோடி வென்றேன், மோசமாக மாறியது வாழ்க்கை: வெற்றியாளரின் உருக்கமான பதிவு

செய்திப்பிரிவு

2011ஆம் ஆண்டு, நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கவுன் பனேகா க்ரோர்பதி (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியில் போட்டியிட்டு, ரூ.5 கோடி வெற்றி பெற்று சாதனை படைத்தவர் சுஷில் குமார். பிஹாரைச் சேர்ந்த இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார். ஆனால் இருந்த பணத்தை ஒழுங்காக நிர்வகிக்காமல் தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து சுஷில் குமார் பகிர்ந்துள்ளார். அவரது இந்திப் பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு:

"2015-16 ஆண்டுகள் மிகவும் சவாலாக இருந்தது. வாழ்க்கையில் வந்த புதிய முன்னேற்றங்களை எப்படிக் கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளூர் பிரபலமானேன். ஒவ்வொரு மாதமும் 10-15 நாட்கள் பிஹாரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகச் செல்ல அழைப்பு வரும். செல்வேன். இதனால் என் கல்வி தடைபட்டது.

அன்றைய நாட்களில் ஊடகங்களில் வரும் விஷயங்களை நான் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்வேன். எனவே ஊடகத்திலிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் வேலையில்லாமல் இருக்கிறேன் என்று சொல்லக்கூடாது என்பதால் பல வியாபாரங்களில் முதலீடு செய்தேன். ஆனால் அவை பெரும்பாலும் தோல்வியடைந்து பணத்தை இழந்தேன்.

நல உதவிகள் செய்ய வேண்டும் என்ற பேரார்வம் இருந்ததால் ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வரை அதற்காக ஒதுக்கி வைத்தேன். ஆனால் எனது நல்ல எண்ணத்தை பலர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். நிறைய பணத்தை ஏமாற்றினர். என் மனைவியுடனான உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

சில காலம் சீரான வருமானம் வந்தது. அதற்குக் காரணம், நண்பர் ஒருவருடன் சேர்ந்து டெல்லியில் கார்களை வாடகைக்கு விட்டு சம்பாதித்தேன். இதனால் அடிக்கடி டெல்லி செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் தான் ஒரு கல்லூரி ஊடக மாணவர்கள் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. புதிய சிந்தனைகள், நம்பிக்கைகள் பற்றி தெரிந்து கொண்டேன். பல விஷயங்கள் பற்றி எனக்குத் தெரியாது என்பதால் ஒரு கிணற்றுத் தவளைப் போல உணர்வேன். அப்படியே அவர்களுடன் சேர்ந்து குடி பழக்கமும், புகை பழக்கமும் சேர்ந்து கொண்டது.

அந்த மாணவர்களுடன் சேர்ந்ததால் திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. வீட்டில் பல நாட்களை படங்கள் பார்த்து கழித்தேன். ஒரு முறை ப்யாஸா என்கிற படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த என் மனைவி, ஏன் ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறாய் என்று கண்டித்தார். அறையை விட்டு என்னை வெளியேறச் சொன்னார். எங்கள் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்பதால் நான் உடனடியாக வெளியேறிவிட்டேன். அப்போது ஒரு பத்திரிகையாளர் என்னை தொலைப்பேசியில் அழைத்தார்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை கோபப்படுத்தியது. வெற்றி பெற்ற அனைத்து பணத்தையும் நான் இழந்துவிட்டேன் என்றும், இரண்டு மாடுகளை வாங்கி அதன் பாலை விற்றுத்தான் தற்போது சம்பாதித்து வாழ்கிறேன் என்றும் அவரிடம் கோபமாகச் சொன்னேன். அந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதன் பிறகு என்னை சிறப்பு விருந்தினராக யாரும் அழைக்கவில்லை. பலர் என்னிடமிருந்து விலகிவிட்டனர்.

என் மனைவியுடன் நடந்த இன்னொரு பெரிய சண்டையால் விவாகரத்து வரை பிரச்சினை போனது. சரி இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்குச் சென்றேன். எனக்கு திரைப்படங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதால் ஒரு தயாரிப்பாளர் என்னை தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றி கற்றுக் கொள்ளச் சொன்னார். பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்தேன். ஆனால் விரைவில் அதுவும் வெறுத்துவிட்டது.

மும்பையில் ஆறு மாதங்கள் தனியாக செலவிட்ட பின் தான், நான் மும்பைக்கு இயக்குநராக வரவில்லை, எனது பிரச்சினைகளிலிருந்து தப்பித்து வந்திருக்கிறேன் என்று உணர்ந்தேன். நம் இதயம் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சி கிடைக்கும் என்று உணர்ந்தேன். வீட்டுக்குத் திரும்பினேன். ஆசிரியராக பயிற்சி எடுத்தேன். அதில் தேர்வானேன். இப்போது எனக்கு அமைதியைத் தரும் பல சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளையும் செய்கிறேன். கடைசியாக 2016-ஆம் ஆண்டு குடித்தேன். கடந்த ஆண்டு புகைப் பழக்கத்தையும் விட்டுவிட்டேன். இப்போது ஒவ்வொரு நாளும் எனக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

வாழ்க்கையில் தேவைகள் சிறியதாக இருக்க வேண்டும். சின்ன சின்ன லட்சியங்களை வைத்துக்கொண்டு அதை நிறைவேற்ற பணியாற்ற வேண்டும்".

இவ்வாறு பகிர்ந்துள்ள சுஷில் குமார், முடிவில் கேபிசி 5 வெற்றியாளர் என்றே கையொப்பத்தோடு பதிவை முடித்துள்ளார். சுஷில் குமாரின் இந்த உருக்கமான அனுபவப் பகிர்வு தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT