வலைஞர் பக்கம்

கலாம் நெஞ்சமெலாம் 3

மு.சிவலிங்கம்

ஒரு தமிழ் இதழில் நல்ல சம்பளத் தில் பணியாற்றி வந்த உதவி ஆசிரியர் வேலையை வேறு ஒரு வாய்ப்புக் காகக் கைவிட நேர்ந்தது. ஆனால், எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளித்ததால் வாழ்க்கைப் போராட்டம் கடுமையானது. அந்த இக்கட்டான நாட்களில் கடலில் தத்தளித்தவனைக் காப்பாற்ற வந்த கடவுள் போல வேறு ஒரு வார இதழில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. அந்தப் பணியை ஒப்புக்கொண்ட சில நாட்களில் அப்துல் கலாமின் ஆங்கில சுயசரிதையைத் தமிழாக்கம் செய்யும் பொன்னான வாய்ப்பும் தேடி வந்தது.

ஆங்கில மூல நூலைப் படிக்கப் படிக்கப் பரவசம் அடைந்தேன். அந்த நூலுக்குள் மேலும் மேலும் ஆழமாக மூழ்கினால்தான் மொழி பெயர்ப்புப் பணியைச் செம்மையாக நிறைவேற்ற முடியும் என்று தோன்றி யது. நிலையான ஊதியத்துடன் பத்திரிகை வேலையா, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதே நிச்சயம் இல் லாத மொழிபெயர்ப்புப் பணியா என ஊசலாட்டமாக இருந்தது. இந்த இரண்டு குதிரைகளிலும் ஒரே சமயத்தில் சவாரி செய்வது முடியாத விஷயம் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் வரவில்லை.

மூன்று, நான்கு நாட்களுக்குள் முடிவெடுத்தேன். ‘அக்னிச் சிறகுகள்’ நூலை தமிழில் மொழிபெயர்ப்பதில் முழுமூச்சாக இறங்கினேன். அப்துல் கலாமின் அன்புக்குப் பாத்திரமான அருண் திவாரி வார்த்தெடுத்த ஆங்கில நடை, அந்த வரலாற்று நாயகனின் சொந்த உலகத்துக்குள் என்னை ஒரு குழந்தை யைப் போல கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றது. அந்த ஆங்கில எழுத்து அத்தனை காட்சிகளை யும் என் மனக் கண்ணில் உயிர்பெற வைத்தது.

வாசிக்கும்போது அனு பவித்த சுகமும் நம்பிக்கை யும் மொழிபெயர்ப்பைத் தொடரும்போது ஏமாற்ற மாகவும் அவநம்பிக்கை யாகவும் மாறின. ‘அவசரப் பட்டுவிட்டோமோ? தெரி யாத்தனமாக இந்த வேலையை ஒப்புக் கொண்டு விட்டோமோ? என்று மனம் அலைபாய்ந்தது. நான் துவண்டுவிடும் போது எல்லாம் எனக்குள் ஒரு குரல் ‘உன்னால் முடியும், மொழிபெயர்ப்பு நன்றாக அமையும்’ என ஒலித்தது. ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த, படிப்பறிவு இல்லாத பாமரன் ஒருவன் மகாகவி காளிதாசன் ஆனது போல என்று சொன்னால் மிகை யாகத் தோன்றலாம். ஆனால், அதைப் போன்ற ஒரு அதிசயமாகத்தான் எனக்குள் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை பிறந்தது.

எனக்குப் பிடிபடாத ராக்கெட், செயற் கைக்கோள் தொழில்நுட்ப விஷயங் களைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டு, கலாமின் அற்புதமான வாழ்க்கைச் சம்பவங்களை மொழி பெயர்த்துக்கொண்டே போனேன். எனது அறிவியல் படிப்பு என்பது பழைய எஸ்.எஸ்.எல்.சி.யோடு (11-ம் வகுப்பு) முடிந்துவிட்டது. அடிப்படை அறிவியல் கல்வி என்ற அடித்தளம் இல்லாத என் னால் ராக்கெட் உருவாக்கம், அதன் செயல்பாடு, அணு ஆற்றல் என்பதை யெல்லாம் எளிய தமிழில் எப்படி எழுத முடியும்?

இந்த நுட்பங்களை எனக்குப் புரிய வைப்பதில் ஓரிரு நண்பர்கள் முடிந்த அளவுக்கு முயன்று பார்த்தார்கள். அவர்கள் விவ ரிக்கும்போது புரிந்ததுபோல இருக்கும். தமிழில் எழுதத் தொடங்கியதும், கண்ணைக் கட்டிக் காட்டில்விட்டது போல ஆகிவிடும்.

எனக்குப் புரியவைக்கும் வெகு திறமையான ஆசானை சளைக்காமல் தேடினேன். அந்த ஆற்றல் வாய்ந்த வழி காட்டி என் பக்கத்திலேயே இருந்ததை உணராமல், எங்கெங்கோ தேடினேன். ஒருநாள் என் நெருங்கிய நண்பர் சந்திர னால் எனக்கு உதவ முடியும் என்ற நம் பிக்கை மின்னல்வெட்டாகப் பளிச்சிட் டது. சிவில் இன்ஜினீயரிங் படிப்பு முடித்து, ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய அவர், பத்திரிகைத் துறை மீது கொண்ட காதலால் பிரபல வார இதழில் நிருபராகப் பணியாற்றினார். விண்வெளி அறிவியல் தொடர்பான விஷயங்களும், ராக்கெட், செயற்கைக்கோள் தொழில் நுட்பங்களும் அவருக்கு அத்துப்படி. அந்த நுணுக்கங்களை எல்லாம் அரிச் சுவடியில் இருந்து ஆரம்பித்து விளக்க மாக எடுத்துச் சொன்னார். சிக்கலான அறிவியல் வார்த்தைகளுக்குச் சரியான, எளிமையான தமிழ்ப் பதத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை யில் அவர் தங்கியிருந்த மேன்ஷனில் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் எனக்கு வகுப்பு நடத்து வார். நள்ளிரவு 1 மணி வரை இது நீடிக்கும். எனக்காக ஞாயிறு விடுமுறை யில்கூட சொந்த ஊருக்குச் செல்லாமல் உதவினார். இந்தப் பேருதவி கிடைக்காமல் போயிருந்தால், அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’ நூலை இவ்வளவு நேர்த்தியாக என்னால் மொழிபெயர்த்திருக்க முடியாது.

என்னுடைய மொழிபெயர்ப்புப் பணியில் உரிய ஆலோசனைகளைக் கூறி என்னைப் பட்டை தீட்டிய மேலும் இரண்டு நெருங்கிய நண்பர்களான பத்திரிகையாளர்கள் அரவிந்தனும் சதாசிவனும், ‘அக்னிச் சிறகுகள்’ மொழிபெயர்ப்பிலும் துணை நின்றனர்.

இதனிடையே, வேலையை ஆரம் பித்து இரண்டு மூன்று மாதங்களாகி விட்டதால் எனது பதிப்பாளர் கோபம் கொண்டார். கடுமையான வார்த்தை களில் அதிருப்தியை வெளியிட்டார். எங்கேயாவது, எப்படியாவது பணம் புரட்ட முடிந்தால், அவரிடம் வாங்கிய முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு இந்த மொழிபெயர்ப்புப் பணியில் இருந்து விடுபட்டுவிடலாமா என்றுகூட யோசித்தேன். தன்மானம் போர் முரசு கொட்டியது; யதார்த்தமோ பொறுமையை உபதேசித்தது.

அடுத்த இரண்டு மாதங்களில் மொழி பெயர்ப்பை வெற்றிகரமாக முடித் தேன். திரும்ப ஒரு தடவை வாசித்துப் பார்க்கக்கூட அவகாசம் எடுத்துக்கொள் ளாமல், மொழிபெயர்ப்பின் கையெழுத் துப் பிரதியைப் பதிப்பகத்தில் ஒப்படைத் தேன். என் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறையுள்ள நண்பரான பத் திரிகையாளர் ரகு பிரமாதமான ஒரு யோசனை சொன்னார். அதன்படி மொழி பெயர்ப்பின் மின் அச்சுக்கோர்ப்பு வடிவம் (DTP) அப்துல் கலாமுக்கு அனுப்பப் பட்டது. அப்போது அவர், மத்திய பாதுகாப்பு அமைச்சரின் முதுநிலை ஆலோசகர் பொறுப்பு வகித்தார்.

சில மாதங்கள் கடந்தும் மொழிபெயர்ப்பு வடிவத்தை அவர் திருப்பி அனுப்பவில்லை. இதனால், நூல் வெளியீடு தாமதமானது.

ஒருநாள், சென்னை அடையாறு அருகே காரில் சென்றுகொண்டிருந்த பதிப்பாளர் காந்தி கண்ணதாசனை அப்துல் கலாம் அலைபேசியில் அழைத்தார். அப்துல் கலாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக ஒரு பாலத்துக்குக் கீழே தனது காரை நிறுத்தினார் காந்தி கண்ணதாசன்.

அவர் என்ன கேள்வி கேட்டார்; இவர் என்ன பதில் சொன்னார்?

- சிறகு விரியும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: mushivalingam@yahoo.co.in

SCROLL FOR NEXT