வலைஞர் பக்கம்

வ.ராமசாமி ஐயங்கார் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

சுதந்தரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தப் படைப்பாளி யுமான ‘வ.ரா.’ எனப்படும் வ.ராமசாமி ஐயங்கார் (Va.Ramasamy Iyengar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூரில் நடுத்தரக் குடும்பத்தில் (1889) பிறந்தார். தந்தை வைதீகத் தொழில் செய்துவந்தவர். உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. பிறகு தஞ்சை, திருச்சியில் பயின்றார்.

* விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். 1910-ல் அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். காந்தியடிகள் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார். மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது மூடப் பழக்கவழக்கங்களே என்று கூறியவர், அவற்றை எதிர்த்து முழுமூச்சுடன் போராடினார்.

* ஆச்சார நியமங்களைக் கைவிட்டார். உறவுகளைத் துறந்தார். சமுதாய சீர்திருத்தப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண் கல்விக்காகப் போராடினார். இதுபற்றி பல புதினங்களை எழுதினார்.

* படைப்புத் திறன் மிக்கவர். 1914-ல் ‘சுதந்தரன்’ பத்திரிகை ஆசிரியரானார். வர்த்தமித்திரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி என பல பத்திரிகைகளில் பணியாற்றினார். கல்கி, புதுமைப்பித்தன் போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.

* இவரது சிறுகதைகள் சமூக சீர்கேடுகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருந்தன. சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத் தீவு ஆகிய புதினங்கள், மகாகவி பாரதி பற்றிய நூல், மழையும் புயலும் என்ற கட்டுரைத் தொகுப்பு, கற்றது குற்றமா என்ற சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவரது பிரசித்தமான படைப்புகள்.

* வ.வே.சு.ஐயர், அரவிந்தரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அரவிந்தர் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். புதுவையில் அரவிந்தர், பாரதியுடன் வசித்தபோது, வங்காள மொழி கற்றார். பக்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய வங்க மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்தார். அதை வெகுவாகப் பாராட்டினார் பாரதி.

* வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு, கைதானார். அலிப்பூர் சிறையில் இருந்துகொண்டே ஆங்கில ஆட்சிக்கு எதிராக கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் ‘ஜெயில் டைரி’ என்ற நூலாக வெளிவந்தது.

* இவர் ஆசிரியராக இருந்த ‘மணிக்கொடி’, தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. விடுதலைப் போராட்டம், சமூகம், இலக்கியம், கலை என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் அது ‘மணிக்கொடி காலம்’ என்றே போற்றப்பட்டது.

* மெட்ராஸ் வானொலி நிலையம் 1938-ல் தொடங்கப்பட்டபோது ‘மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில் வ.ரா. ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. வானொலியில் 12 ஆண்டுகளில் சுமார் 120 உரைகள் ஆற்றினார். உரைநடை வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்தார்.

* புதுச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த பாரதிக்கு உதவியாக இருந்தார். பாரதியின் வாழ்க்கை குறித்த முதல் புத்தகமே இவர் எழுதியதுதான். ‘பாரதியின் வாரிசு’ என புகழப்படும் சமூக சீர்திருத்தப் படைப்பாளியான வ.ரா. 62-வது வயதில் (1951) மறைந்தார்.

SCROLL FOR NEXT