தனது பங்களாவுக்கு முன்னால் விடுதலைப் போராட்ட ஊர்வலம் நடக்கும்போதெல்லாம் எகிறிக் குதித்துக் களத்தில் இறங்கிவிடுவார் 18 வயதான அந்த இளைஞர். இதனால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். அலகாபாதின் மருத்துவச் சேவை முகாமின் தலைவராகவும் செயல்பட்டார். கவலையடைந்த அவருடைய தாய், காந்தியடிகளிடம் கூட்டிச்சென்று தன் மகனுக்கு அறிவுரை கூறும்படி வேண்டினார். அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளைக் கேட்ட காந்தியடிகள், “உங்கள் மகன் ஒரு புரட்சியாளர். இவரைப் போல ஏழு பேர் எனக்குக் கிடைத்தால், ஏழு நாட்களில் இந்தியா சுதந்திரம் அடைந்துவிடும்” என்றார்.
போர்க் குணமும் சேவை மனமும் நிறைந்த அந்த இளைஞர்தான் பிரோஸ் காந்தி. மும்பையில் 1912 செப்டம்பர் 12-ல் பார்சி குடும்பத்தில் பிறந்தார். அலகாபாதில் உள்ள எவிங் கிறிஸ்தவக் கல்லூரியிலும், லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் படித்தார். 1930-ல் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, ‘வானர் சேனா’-வில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘கந்தி’ எனும் குடும்பப் பெயரை ‘காந்தி’ என மாற்றிக்கொண்டார். ஒரு நாள் அவருடைய கல்லூரி வளாகத்துக்கு முன்னால் பெண்கள் சிலர் போராட்டம் செய்தபடி ஊர்வலமாகச் சென்றனர். அதில் ஒருவரான ஜவாஹர்லால் நேருவின் மகள் இந்திராவுடன் அப்போது பழக்கம் ஏற்பட்டது. இருவரின் காதலை ஆரம்பத்தில் நேரு எதிர்த்தார். எனினும், 1942-ல் ஆனந்த பவனில் பிரோஸ் - இந்திரா திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் காதல் தம்பதியினர் தீவிரமாக ஈடுபட்டனர். 1942 செப்டம்பர் 10-ல் கைதுசெய்யப்பட்டு, அலகாபாத் நைனி மத்தியச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். ஓராண்டு சிறைத் தண்டனை முடிந்து விடுதலையான பிரோஸ், 1946-ல் ‘நேஷனல் ஹெரால்டு’பத்திரிகையின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
பின்னர், உத்தரப் பிரதேசத்தின் ராய் பரேலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் மாமனார் நேருவையே எதிர்த்து, ஹரிதாஸ் முந்திரா எனும் வியாபாரி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளில் செய்த ஊழலை வெளிக்கொணர்ந்தார். அதுமட்டுமல்லாமல், பத்திரிகையாளரின் சீரிய பார்வையோடு அரசியல் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் பலவற்றை இந்தியாவில் முதன்முதலாக அம்பலப்படுத்தினார். சோஷலிசவாதியாகத் திகழ்ந்த அவர், எல்.ஐ.சி, இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுத் துறைகளாக மாற்றப்படுவதற்கும் வழிவகுத்தார். பழம்பெரும் நாடாளுமன்ற உறுப்பினரான சசி பூஷண், ‘பிரோஸ் காந்தியின் அரசியல் வாழ்க்கைக் குறிப்பு’ என்னும் புத்தகத்தில் அவருடைய நேர்மையான செயல்பாடுகளையும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளையும் பதிவுசெய்துள்ளார். 1960 செப்டம்பர் 8-ல் பிரோஸ் மரணமடைந்தபோது அவர் இறுதி ஊர்வலத்தில் திரண்டுவந்த பெருங்கூட்டத்தைக் கண்டு திகைத்த நேரு, “பிரோஸ் இவ்வளவு பிரபலமானர் என்று எனக்கு இதுவரை தெரியாது” என்றார்.