வலைஞர் பக்கம்

வேலி நாடக விமர்சனம்: டாலர் எனும் புதிருக்குள் சிக்கிய வாழ்க்கை

செல்லப்பா

அந்த மாலைப்பொழுது கொஞ்சம் இறுக்கமானதாக அமைந்தது. கண்முன்னே ஒரு அமெரிக்கத் தம்பதியின் குடும்பச் சிக்கல் அரங்கேறிக்கொண்டிருந்தது. தீவிர மன உணர்வுகளைக் கிளறியபடி நகர்ந்து கொண்டிருந்தது அல்லயன்ஸ் பிரான்சேயில் கண்ட ‘வேலி’ நாடகம்.

பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள மனிதர்கள் தேசங் களின் எல்லையை எளிதாகக் கடந்து சென்றுவிடுகின்றனர். ஆனால் அவர் களது மனதில் சொந்த தேசம் விதைத்த எண்ணங்களே பரிபூரணமாக நிரம்பி வழிகின்றன. தாங்கள் சென்ற நாட்டில் திடீரென ஒரு சிக்கல் ஏற்படும்போது நிலைதவறி விடுகின்றனர். உறவுகளுக் குள்ளேயே சிக்கல் முளைக்கிறது. இதற்கெல்லாம் மனிதர்களின் மனோபாவம் காரணமா, அவர்கள் போன நாடு காரணமா? இப்படிப் பல கேள்விகளை எழுப்புகிறது ‘வேலி’.

எந்த நேரத்திலும் மனிதர்களை மனப்பிறழ்வுக்கு உள்ளாக்கக் கூடிய நெருக்கடிகளை தாராளமாக தருகிறது அமெரிக்க வாழ்க்கை. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறான் ராஜன், மனைவி ஜெயாவுடன், டாலர்களைக் குவிப்பதற்காக. படுக்கை அறையின் ஒரு பகுதியில் தலையணைபோல எப்போதும் இடம்பிடித்துக் கொள்கிறது மடிக்கணினி. தன் குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து விபத்து நேர்வதாக ராஜன் கூறுகிறான். மனைவி யும் நம்புகிறாள். குழந்தை சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக மருத்து அறிக்கை சொல்கிறது. குழந்தை வளர்க்கும் தகுதி ராஜனுக்கு இல்லை என்று சட்டம் சொல்ல முற்படுகிறது. சராசரி இந்தியத் தாயான ஜெயா வுக்கு, குழந்தை தங்களிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுமோ என்ற பதற்றம்.

நாடகத்தில் ஒரு புதிர் மெல்ல மெல்ல அவிழ்கிறது. அது முழுவதுமாக அவிழ்ந்துகொள்ளும்போது நாடகம் நிறைவடைகிறது; பார்வையாளனின் மனதில் வாழ்வு குறித்த வெறுமை சூழ்ந்துகொள்கிறது. வாழ்க்கையின் ஆதார நம்பிக்கைகளை லாவகமாக ஆனால் தீவிரமாக அசைத்துப் பார்க் கிறது நாடகம்.

5 கதாபாத்திரங்கள், ஒன்றரை வயதுக் குழந்தை அப்பு உட்பட காட்டப்படாத ஓரிரு கதாபாத்திரங்கள், டிரேயில் ஒரு தண்ணீர் ஜாடி, 2 டம்ளர்கள், சில கோப்புகள், சீப்பு, மொபைல், பேனா, டைரி. அநேகமாக இவைதான் அரங் கத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால் அமெரிக்காவை, அங்கே ஒரு தம்பதி எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகளை, சட்டச் சிக்கல்களை கண்முன்னே தத்ரூபமாக விரிக்கின்றது. இதன்மூலம், இயக்குநரின் பண்பட்ட இயக்கத்தை உணரமுடிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த வேடத்துக்கு ஏற்றபடி மிக பாந்தமாகப் பொருந்தியிருக்கிறது.

கணவனுக்குப் பயந்து அவனுக்கு அடங்கியே நடந்துபழகிய ஜெயா வின் உடல்மொழியிலேயே சதா ஒரு பயம் தென்படுகிறது. ஆனால் குழந் தைக்குக் கணவனால் ஆபத்து என்று தெரிந்தபோது அவளிடம் வெளிப் படும் ஆங்காரம் அவளிடம் குடி கொண்டிருக்கும் இந்திய தாய் மனதை வெளிக்கொண்டுவந்துவிடுகிறது.

மன அழுத்தத்தை உருவாக்குவதி லும் அதிகரிப்பதிலும் செல்போனுக்கு உள்ள பங்கை எளிதில் புறந்தள்ள முடியாது. இந்த நாடகம் அதையும் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறது. ஜெயா தன் தாயுடன் மொபைலில் மேற் கொள்ளும் உரையாடலில் தொடங்கும் நாடகம் ராஜன் வழக்கறிஞருடன் மொபைலில் வாக்குமூலம் தருவதாகச் சொல்வதுடன் நிறைவடைகிறது.

ஒரு திரைப்படம் தரும் அனுபவத்தில் இருந்து நாடகம் தரும் அனுபவம் முற்றிலும் வேறுபடுகிறது. நாடகத்தின் அனுபவம் மனதின் அடி ஆழம் வரை ஊடுருவுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடகம் என்னும் ஒரு கலையின் மகத்துவத்தை நம்மிடையே புரியவைத்து விடைபெறுகிறது ‘வேலி’.

SCROLL FOR NEXT