வலைஞர் பக்கம்

எலீ வீஸல் 10

செய்திப்பிரிவு

நோபல் பரிசு பெற்ற ருமேனிய எழுத்தாளர்

உரிமைப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான எலீ வீஸல் (Elie Wiesel) பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ருமேனியாவின் சியாகட் நகரில் (1928) பிறந்தார். யூத மதக் கல்வி கற்றார். மனிதநேயம் குறித்து தந்தையிடமும், மத நம்பிக்கைகள் பற்றி தாயிடமும் அறிந்துகொண்டார்.

# வீட்டில் யூத மொழியான இத்திஷ், ஜெர்மனி, ஹங்கேரி, ரோமானிய மொழிகளை பேசியதால் அவற்றில் ஆர்வமும் புலமையும் உண்டானது. ஹீப்ரு மொழி கற்றார். பல இலக்கியங்கள், அறிவுசார் நூல்களைப் படித்தார்.

# இரண்டாம் உலகப் போரின்போது, போலந்தின் ஆஷ்விட்ஸ் நகர வதை முகாமுக்கு 15 வயதில் அனுப்பப்பட்டார். அங்கு நாஜிக்கள் செய்த சித்ரவதைகளை நேரடியாகப் பார்த்தார். அந்த கொடுமைகளால் தங்கை, தாய், தந்தை அடுத்தடுத்து இறந்தனர். இவரும் 2 அக்காக்களும் நேசப் படைகளால் 1945-ல் விடுவிக்கப்பட்டனர்.

# பாரீஸுக்கு சென்று, படிப்பைத் தொடர்ந்தார். ஹீப்ரு கற்பித்தார். பிரெஞ்சு மொழி கற்று, பிரெஞ்சு மற்றும் இஸ்ரேலிய செய்தித்தாள்களில் பணியாற்றினார். அங்கு பல அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது.

# இளம் வயதில் அனுபவித்த சித்ரவதைகள் குறித்து இத்திஷ் மொழியில் ‘அண்ட் தி வேர்ல்டு வுட் ரிமைன் சைலன்ட்’ என்ற 900 பக்க நூலை 1956-ல் எழுதினார். பின்னர் இதை சுருக்கமாக பிரெஞ்சில் ‘லா நியுட்’ என்ற பெயரிலும், 1960-ல் ஆங்கிலத்தில் ‘நைட்’ என்ற பெயரிலும் எழுதினார்.

# ஆரம்பத்தில் இது அவ்வளவாக விற்கவில்லை. நாள் ஆகஆக, விற்பனை சூடுபிடித்தது. அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகாலத்துக்கு, ஆண்டுதோறும் 3 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இது 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

# தொடர்ந்து ‘டான்’, ‘டே’, ‘கேட்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட்’, ‘தி ஓத்’, ‘ஆல் ரிவர்ஸ் ரன் டு தி ஸீ’ என்பது உட்பட 40-க்கும் மேற்பட்ட புனை மற்றும் அல்புனைப் புதினங்களை எழுதினார். யூதப் பேரழிவு குறித்து ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

# அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை பேராசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். நியூயார்க் பல்கலைக்கழகம், அமெரிக்கன் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, யேல் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். யூதப் பேரழிவு ஆணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

# அமைதிக்கான நோபல் பரிசு 1986-ல் வழங்கப்பட்டது. ‘மெஸஞ்சர் ஆஃப் மேன்கைண்ட்’ என்ற பட்டத்தை நார்வே நோபல் கமிட்டி வழங்கியது. அமெரிக்க அதிபர் பதக்கம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம் உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார்.

# நியூயார்க்கில் வசிக்கும் எலீ வீஸல், தன் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு பலியானவர்கள் மற்றும் குர்த் இன மக்களின் உரிமைகளுக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் 87 வயதிலும் குரல் கொடுத்து வருகிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

SCROLL FOR NEXT