வலைஞர் பக்கம்

கவாத்து செய்தால் குடை போல் மாறும் கொய்யா மரங்கள்: மகசூல் அதிகரிப்பதாக தோட்டக்கலைத்துறை அறிவுரை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

முறையாக கவாத்து செய்தால் குடை போல் கொய்யா மரங்கள் மாறி அதிக மகசூல் தருவதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரேவதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கொய்யாவின் சாகுபடி முறையில் கவாத்து செய்தல் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஏனெனில் புதிய கிளைகளில் மட்டுமே பூக்கள் அதிகம் தோன்றும். பொதுவாக ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலும் மற்றும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.

அதாவது காய்ப்பு முடிந்த உடன் காய்ந்த மற்றும் நோய் தாக்கிய கிளைகளையும், செடியின் அடிபாகத்தில் தோன்றும் கிளைகளையும் நீக்கி விட வேண்டும். கிளைகளின் நுனி பகுதியிலிருந்து உள்நோக்கி 45 செ.மீ அளவில் கிளைகளை வெட்டி கவாத்து செய்ய வேண்டும்.

இம்முறையில் கவாத்து செய்வதால் மரங்கள் குடை போன்ற அமைப்பில் காணப்படும். ஆகையால் அதிக அளவு சூரிய ஒளி மற்றும் காற்று ஊடுருவி சென்று தழைத்து வரும் புதிய கிளைகளில் அதிக பூக்கள் தோன்றி காய்கள் பிடித்து மகசூல் அதிகரிக்கும்.

கவாத்து செய்த உடன் ஒரு மரத்திற்கு தொழுஉரம் 25 கிலோ, யூரியா 1 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 3 கிலோ மற்றும் பொட்டாஷ் 800 கிராம் அடிஉரமாக இட்டு நீர்பாய்ச்ச வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT