சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சிவராமன், 80 விவசாயிகளை இயற்கை முறையில் நாட்டு நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு மாற்றியுள்ளார்.
பலரும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தியே விவசாயம் செய்து வருகின்றனர். ஒருசிலர் மட்டுமே இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிங்கம்புணரி அருகே உலகம்பட்டி விவசாயி சிவராமன் இயற்கை முறையில் நாட்டு நெல் ரகங்களைப் பயிரிட்டு சாகுபடி செய்கிறார். இவருக்கு 2 ஏக்கர் மட்டுமே சொந்த நிலம் உள்ளது. விவசாயம் மீதான ஆர்வத்தால் மேலும் 9 ஏக்கர் குத்தகை பெற்று சாகுபடி செய்கிறார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய நாட்டு நெல் ரகத்தை சாகுபடி செய்கிறார். இந்தாண்டு பூங்காறு நெல் சாகுபடி செய்துள்ளார். மேலும் இவர் நாட்டு ரகங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தாண்டு மட்டும் இவர் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 80 பேரை இயற்கை முறையில் நாட்டு நெல் ரகங்கள் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
இதேபோல் மற்றவர்களையும் நாட்டு நெல் ரகங்கள் சாகுபடிக்கு மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறார்.
இதுகுறித்து விவசாயி சிவராமன் கூறியதாவது:
நம்மாழ்வார் மீதான ஈர்ப்பால் இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். முதலில் அரை ஏக்கரில் பாரம்பரிய நெல் வகையான மாப்பிள்ளை சம்பா நட்டேன். 14 மூடைகள் கிடைத்தது.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து நாட்டு ரகங்களை நடவு செய்தேன்.
இலும்பைப்பூ சம்பா, கருடன் சம்பா, ஆத்தூரு கிச்சடி சம்பா என பாரம்பரிய நெல் ரகங்களையே நடவு செய்கிறேன். அனைத்தும் இயற்கை முறையில் தான். தற்போது கூடுதலாக 9 ஏக்கர் நிலத்தை குத்தகை பெற்று நெல் ரகம் மட்டுமின்றி வாழை, கேழ்வரகு, கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்கிறேன்.
இயற்கை விவசாயத்திற்கு மாறுவோர் உழவுக்கு முன்பு மாட்டு சாணத்தை (தொழு உரம்) கொட்ட வேண்டும். அதன்பிறகு இலை, தளை போட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும். உயிரி உரத்துடன் குப்பை (அ) மணல் கலந்து வீச வேண்டும்.
தொடர்ந்து நடவு செய்ய வேண்டும். களை எடுத்த பின்பு வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம், உயிரி உரம் பயிர்களுக்கு இட வேண்டும்.
பயிர் நன்றாக வளர பஞ்சகவ்யம் தெளிக்க வேண்டும்.
மேலும் பசுந்தாள் இலை, சாணம், பனம் பழம், வேம்ப புண்ணாக்கு போன்றவற்றை துணி பையில் கட்டி வாமடையில் குழி தோண்டி புதைக்க வேண்டும். அவை தண்ணீர் மூலம் பயிர்களுக்கு செல்வதால் நன்கு கிளைவிடும்.
45 - 60 நாட்களுக்குள் மீன் அமிலம் தெளிப்பேன். பாரம்பரிய நெல் என்பதால் பயிர்களை பூச்சி தாக்காது. பூச்சி தாக்கினால் பூச்சி விரட்டி பயன்படுத்தலாம்.
நான் சில செடிகளை மாட்டு சிறுநீரில் ஊரவைத்து பூச்சி விரட்டியாக பயன்படுத்துகிறேன். சார் உறிஞ்சி பூச்சி, தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த இஞ்சு, பூண்டு கரைசலை பயன்படுத்தலாம்.
நெல் மட்டுமின்றி தோட்டக்கலை பயிர்களுக்கும் இதே முறையைப் பயன்படுத்தலாம், என்று கூறினார்.