கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து பொது மக்களுக்கு வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த தம்பதி.
மதுரையில் மாண்டிச்சோரி ஸ்கூல் நடத்தும் கணவன், மனைவி இருவர், தற்போது பள்ளி திறக்கப்படாததால் தங்கள் பள்ளி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் துணையுடன் தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து வீடு வீடாக டோர் டெலிவலி செய்வதற்கு உதவுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘கரோனா’ வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து மீளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பேருதவியாக இருப்பதாக கருதி தமிழக அரசு, அதைப் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து மாநகராட்சிகளுக்கும் பரிந்துரை செய்தது.
அரசின் இந்த உத்தரவை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மதுரை மாநகராட்சி கபசுரக் குடிநீர் தயார் செய்து பொதுமக்களுக்கு வீடு, வீடாகச் சென்று விநியோகம் செய்வதில் மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இதற்காக மாநகராட்சி நிர்வாகம், ஒவ்வொரு மண்டலத்திற்கும் தன்னார்வலர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு கபசுரக் குடிநீர் தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
மாநகராட்சியுடன் இணைந்த இந்த சேவையில் மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்த கண்ணன், அவரது மனைவி கீதா ஆகியோர் தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து மாநகராட்சிக்கு வழங்குகிறார்கள். இவர்களின் இந்தச் சேவையை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் நேரடியாகச் சென்று பாராட்டினார்.
இதுகுறித்து கீதா கண்ணன் கூறுகையில், ‘‘எங்களுக்கு பழங்காநத்தம் அக்ரினி வளாகம் மற்றும் வில்லாபுரத்தில் ‘மை மதுரை’ என்ற மாண்டிசோரி ஸ்கூல்கள் உள்ளன. கரோனா ஊரடங்கு என்பதால் தற்போது பள்ளிகள் திறக்கவில்லை. வீட்டில் சும்மா இருந்தோம். இந்த ஓய்வு நேரத்தில் நம்மால் முடிந்த அளவு மக்களுக்கு உதவலாமே என நினைத்தோம்.
மாநகராட்சியும் அதேநேரத்தில் கபசுரக் குடிநீர் தயார் செய்து வழங்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. எங்களிடம் கபசுரக் குடிநீர் தயார் செய்வதற்கான பாத்திரங்கள், பணியாளர்கள் இருந்தனர். நாங்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் நாங்களே கபசுரக் குடிநீர் தயார் செய்து தருகிறோம் என்றோம். உடனே சம்மதித்த ஆணையாளர் விசாகன், கபசுரக் குடிநீர் தயார் செய்வதற்கான பொடி, குடிநீர், கியாஸ் சிலிண்டர்களையும் கொடுத்தார்.
நாங்கள் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து எங்களுடன் கைகோர்த்த மற்ற தன்னார்வலர்களையும் இணைத்துக் கொண்டு தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்கிறோம். காலை 8 மணிக்கெல்லாம் தயார் செய்து பாத்திரங்களில் தயாராக வைத்துவிடுவோம். மாநகராட்சிப் பணியாளர்கள் வந்து வாகனத்தில் அதை எடுத்துக் கொண்டு போய் பொதுமக்களுக்கு வீடு வீடாகக் கொடுக்கிறார்கள்.
பணியாளர்களைக் கொண்டு தினமும் கபசுரக் குடிநீர் தயாரித்து வழங்குவதுதான் எங்கள் பொறுப்பு. உலகத்தையே அச்சுறுத்தும் ஒரு கொள்ளை நோயை ஒழிப்பதில் நாங்களும் அரசுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்பதில் பெருமையும், மனநிறைவும் எங்களுக்கு இருக்கிறது.
நாங்கள் தயாரிக்கும் கபசுரக் குடிநீர் 3 மற்றும் 4-வது மண்டலத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு நேரடியாக நாங்களே வழங்குவதற்கு எங்கள் வீடு அமைந்துள்ள டிவிஎஸ் நகரில் ராஜம்ரோடு சந்திப்பில் ஒரு கபசுரக் குடிநீர் மையம் வைத்துள்ளோம். அங்கு தினமும் 150 லிட்டர் கபசுரக் குடிநீரைப் பொதுமக்களுக்கு வழங்குகிறோம்’’ என்றார்.